ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் (Albert Einstein)
இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற விஞ்ஞானிகளில் தலைசிறந்த விஞ்ஞானியாக குறிப்பிடத்தக்கவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் என்பதில் எவருக்கும் மாறுபாடில்லை. அமெரிக்க பல்கலைக்கழகம் ஒன்றில் உங்களுக்கு பிடித்த விஞ்ஞானிகளின் பெயர்களை எழுதுங்கள் என்று மாணவர்களை கேட்டதும் அத்தனை பேர்களின் பட்டியலிலும் ஐன்ஸ்டீன் இடம் பெற்றிருந்தார் என்றால் அவர் எந்த அளவிற்கு மாணவர்களின் மனதில் இடம் பெற்றிருக்கிறார் என்பதை எண்ணிப் பாருங்கள்.
உலகம் அமைதியாய் வாழ வேண்டும் என்ற கொள்கையை கொண்டவர். அவரின் சார்பு நிலைக் கொள்கையே அணுகுண்டு தயாரிப்புக்கு வித்திட்டது. தான் கண்டுபிடித்த அணுவை ஆக்கபூர்வமான மனித சமூகத்திற்கு உபயோகமான ஒன்றாக பயன்படுத்தவே விரும்பினார்.
ஆனால் அவர் கண்டுபிடித்த சமன்பாட்டை கண்ட அறிவியல் அறிஞர்கள் அதனைக் கொண்டு அணுகுண்டை தயாரித்து ஜப்பானின் மேல் குண்டு போட்டு ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களை அழித்தபோது ஐன்ஸ்டீன் மனம் நொந்தார். இன்றைய உலக விஞ்ஞானிகளால் போற்றப்படும் அவரின் வாழ்க்கையை காண்போம்.
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் இளமைப் பருவம்:
அணு இயலின் தந்தை என போற்றப்படும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் தெற்கு ஜெர்மனியிலுள்ள மியூனிச் என்ற நகருக்கு அருகிலுள்ள உல்ம் என்ற சிற்றூரில் ஹெர்மன் ஜன்ஸ்டீன் பாலைன் தம்பதிகளுக்கு மார்ச் 14 - ம் தேதி, 1879 - ஆம் ஆண்டு பிறந்தார். இவருக்கு மேயா என்ற தங்கை மட்டுமே உண்டு .
ஹெர்மன் தன் தம்பி ஷேக்கோடு சிறிய முதலீட்டில் மின்காந்த தொழிற்சாலையை நடத்தி குடும்பத்தை வழிநடத்தி வந்தார். பாலைனுக்கு இசையில் ஆர்வமுண்டு. வயலின் வாசிப்பதில் திறமையானவர். மகனுக்கு சிறுவயதிலேயே வயலினை கற்றுக் கொடுத்தார்.
இறுதிவரை வயலின் வாசித்து வந்தார் சிறுவயதிலேயே அவர் தனிமை விரும்பியாக இருந்தார். மற்ற சிறுவர்களோடு விளையாட அவர் செல்லமாட்டார்.
தன் தந்தையிடம் வானம் ஏன் மேலே இருக்கிறது? சூரியன் ஏன் பிரகாசிக்கிறது? என்றவாறு பல கேள்விகளை கேட்டுக்கொண்டே இருப்பார். மகனுக்கும் ஹெர்மன் முடிந்த அளவில் தனக்கு தெரிந்த அளவில் பதில் அளித்து வந்தார்.
பள்ளிப்பருவம் வந்ததும் அவரை கத்தோலிக்க கிறிஸ்தவ ஆரம்ப பள்ளியில் சேர்த்தனர். யூதராக இருப்பினும் மத கருத்துக்களை கற்றார். அவருக்கு பேச்சு சரியாக வராததால் அவர் திக்கி திக்கி பேசுவார். அவருக்கு கணிதம், பௌதீகம், பாடங்கள் மட்டுமே இனிப்பாக இருந்தது.
மற்ற பாடங்கள் கசப்பாக இருந்தன, பள்ளி இறுதித் தேர்வில் கணிதம், பௌதீகத்தில் மட்டுமே தேறினார். இவரின் நண்பரான மர்லின் என்பவர் இவருக்கு மற்ற பாடங்களை சொல்லிக் கொடுத்து இறுதி ஆண்டை வெற்றி பெற வைத்தார்.
ஐன்ஸ்டீன் ஆராய்ச்சி :
தொழில் நஷ்டத்தால் இவர் குடும்பம் இத்தாலி மிலான் நகரில் பேவியா என்னும் இடத்திற்கு இடம் மாறியது. 1896 - ல் பாடசாலை படிப்பு முடிந்து சுவிட்சர்லாந்து சூரிச்நகர சுவிஸ் கூட்டமைப்பு பல் தொழில்நுட்ப கல்லூரியில் சேர்ந்தார். 1900 - ல் அக்கல்லூரியில் டிப்ளமா பெற்றார். படிக்கும் போது மிலேவா என்ற பெண்ணை காதலித்தார். படிப்பு முடிந்ததும் வேலையின்றி அலைந்தார். சிபாரிசு மூலம் சுவிஸ் காப்புரிமை அலுவலகத்தில் தொழில்நுட்ப உதவிப் பரிசோதகர் பணி கிடைத்தது.
அவரின் பணி காப்புரிமைக்கு வரும் கருவிகள் சரியாக இருக்கின்றனவா என்பதை பரிசோதிப்பதே ஆகும். ஓய்வு நேரங்களில் கணிதம் மற்றும் பௌதீக நூல்களை படித்தார். சிறு சிறு ஆய்வுகள் செய்து வந்தார். புகழ்பெற்ற பத்திரிக்கைகளில் தனது அறிவியல் கட்டுரைகளை எழுதினார் . 1905 - ல் அவர் எழுதிய கட்டுரைகளாவன; பிரௌனின் இயக்க விதிகள், ஒளியின் தோற்ற மாறுபாடுகள், இயங்கும் பொருள்களில் மின் ஆற்றல், அணுத்திரள்களின் அளவுகளை நிர்ணயித்தல் போன்றவைகளை படித்த அறிஞர் உலகம் அவைகளை பாராட்டியது.
பள்ளியில் முட்டாள் என கருதப்பட்ட அவரின் கட்டுரைகள் மூலம் அவர் மேதை என அழைக்கப்பட்டார். 1909 - ஆம் ஆண்டு ஜீரிக் பல்கலைக்கழகம் இயற்பியல் ( பௌதீகம் ) பேராசிரியராக நியமிக்கப்பட்டார். இக்கால கட்டத்தில் அவர் சார்பியல் கொள்கை ( தியரி ஆஃப் ரிலேடிவிடி என்ற கட்டுரையை எழுதினார். இக்கட்டுரை அவரை உலகப் புகழ்பெற்ற அறிஞராக உயர்த்தியது. பல நாட்டு பல்கலைக்கழகங்கள் இம்மேதையை சொற்பொழிவாற்ற அழைத்தன.
சாதனை விருது:
ஜெர்மன் நாட்டு பிரேக் பல்கலைக்கழகம் 1911 - ல் அவருக்கு பேராசிரியர் பணி வழங்கி கௌரவித்தது. மாணவர்களுக்கு அருமையாக விஞ்ஞானப் பாடங்களை நடத்தினார். இவர் பெர்லினில் பணியாற்ற துவங்கியபோது முதல் உலகப்போர் ஏற்பட்டது. போரை வெறுத்தார். மக்களை அமைதியாக வாழ விரும்பும்படி போர் நாடுகளை கேட்டுக் கொண்டார். போருக்கு வேண்டிய கருவிகளை உற்பத்தி செய்யும்படி ஜெர்மனி வற்புறுத்த அவர் மறுக்க அவர் மீது கோபம் கொண்டது. போரில் ஜெர்மன் தோற்க தோல்விக்கு காரணம் யூதர்களே என்று ஜெர்மனி அரசு யூதர்கள் மீது ஆத்திரப்பட, ஐன்ஸ்டீன்-னும் கோபத்திற்குள்ளானார். அவருடைய வீடு தாக்குதலுக்குள்ளானது.
இச்சமயத்தில் அமெரிக்க அறிவியல் ஆய்வு கழகம் இவரை அழைக்க 1921 - ல் இரண்டாம் மனைவி எல்சாவுடன் அமெரிக்கா சென்றார். அங்கு அவருக்கு நல்ல வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு அவர் ஈர்ப்பு வகை, மின்காந்த விசை ஆகியவற்றை ஒரே வடிவக்கணித அடிப்படையில் ஒன்றாக்க முயன்றார். இவர் கண்டறிந்த சார்பியல் கொள்கைக்காக 1922 - ஆம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது என்று சொல்லப்பட்டாலும் முக்கியமாக ஒளி மின் விளைவு ( Photo - Electric Effect ) என்ற ஆய்வுக்கே வழங்கப்பட்டது.
இதனை அவர் 1905 - ல் ஆய்வு செய்து கண்டறிந்தார். இதற்காக ஒரு சமன்பாட்டை உருவாக்கினார். நோபல் பரிசு பெற்றதும் அவர் புகழ் உலகில் பன்மடங்கு பெருகியது. உலகப்புகழ்பெற்ற காந்தி, நேரு, பெர்னாட்ஷா, சார்லி சாப்லின், ரூஸ்வெல்ட் போன்றவர்கள் நண்பர்களானார்கள். மகாத்மா காந்தி இறந்தபோது மிக நல்லவரை உலகம் இழந்து விட்டது என்றார் ஐன்ஸ்டீன். இந்தியா மீது மிகுந்த பற்று கொண்டிருந்தார் அவர்.
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மறைவு :
அறிவியல் ஆக்கத்திற்காக தன் ஆய்வை செய்த இம்மாமனிதரின் சார்பியல் கொள்கையே அணுகுண்டுக்கு வித்தானது. இதன் கண்டுபிடிப்பு மக்களை அழிக்க பயன்பட்டதற்காக வேதனைப்பட்ட அவர் தனது அணுவியல் கொள்கை ஆக்கத்திற்கும் பயன்படுகிறது என்பதை உணர்ந்து மகிழ்ந்தார் . E - mc2 E-enarge M-Moss = பொருட் திணிவு C- ஒளியின் வேகம் என்ற புகழ்பெற்ற சமன்பாட்டை அறிவியல் உலகிற்கு வழங்கிய மேதையான அவர் 1955 - ஆம் ஆண்டு, ஏப்ரல் 18 - ம் நாள் இவ்வுலகை விட்டு மறைந்தார். தனது மூளையையும், உடம்பின் சில பகுதிகளை ஆய்வுக்காக வழங்கினார் அவர்.
இவர் காலம், வெளி, பொருள், இவைகள் மூன்றும் ஒன்றுக்கொன்று சார்புடையவை என்று ஆய்வு மூலம் நிரூபித்தார். நியூட்டன் காலத்தில் அவைகள் மூன்றும் தனித்தனியானவை என்று கூறப்பட்டன. இவரின் குவாண்டம் தியரி பற்றி 3000 - த்திற்கும் மேற்பட்ட நூல்கள் வெளி வந்தும் தியரியை இன்றும் புரியப்படாமலேயே இருப்பதாக அறிவியல் உலகம் கூறுகிறது. ஒளியின் வேகம் மாறுபடாதது. நிலையானது. குறைக்கவோ, அதிகரிக்கவோ முடியாது என்றும் ஆராயிந்து கூறினர்.
ஐன்ஸ்டீன் மிகவும் எளிமையாக வாழ்ந்தார். புகழ் வெளிச்சம் அவர் மீது விழுந்தபோதும், பொதுமக்களிடம் சாதாரணமாகவே பழகினார். தலைமுடி கலைந்திருக்கும். உடைகளில் ஒழுங்கிருக்காது. சாலைகளில் சாதாரணமாகவே சென்றார். உலக மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று விரும்பினார்.
நோபல் பரிசு பெற்ற பின்னரும் பள்ளிகளில் பாடங்கள் நடத்தினார். இன்று ஒருவருக்கொருவர் அறிவு பற்றி பேசும்போது நீ என்ன பெரிய ஐன்ஸ்டீன் என்று கேட்பதன் மூலம் அவரின் அறிவு மிக உயர்ந்தது என்பதை உணரலாம். சார்பியல் கொள்கை மூலம் அணுவியலுக்கு வித்திட்ட அணுவியல் மேதையை என்றும் நினைப்போம்.