இருப்புப்பாதைகள் அறிமுகம்:
இன்று ஒரு சில நாடுகளை தவிர மற்ற நாடுகளில் எல்லாம் இரயில்வே இருப்புப்பாதைகள் இரயில் இஞ்ஜின்களை சுமந்து ஓடுகின்றன. உலகம் முழுக்க லட்சக்கணக்கான கிலோமீட்டர்கள் இருப்பு பாதைகளும், இரயில்களும் இயங்குகின்றன என்றால் அதற்கு மூலகாரணம் ஜார்ஜ் ஸ்டீபென்சன் (George Stephenson) என்ற பள்ளியறியா மேதையாவார்.
ஜார்ஜ் ஸ்டீபென்சன் இளமைப் பருவம்:
நம்மில் பலர் ஐயா நம்மிடம் பத்து நயாபைசா இல்லையே? நாம் என்ன செய்ய போகிறோம்? என்று புலம்புகின்ற சோம்பேறிகள் ஸ்டிபென்சனின் வாழ்க்கையை படித்தாலே போதும், சோம்பலை நீக்கி உழைக்க கிளம்பி விடுவர்.
1781 -ஆம் ஆண்டு நிலக்கரி சுரங்கத்தில் பணிபுரியும் ஏழ்மையான தகப்பனுக்கும், தாய்க்கும் பிறந்தார் ஜார்ஜ் ஸ்டீபென்சன்(George Stephenson). நிலக்கரி சுரங்கத்தில் வாட் இஞ்ஜினை ஓட்டி வாரம் 12 சில்லிங் சம்பாதித்து குடும்பத்தை காப்பாற்றி வந்தார் ஸ்டிபென்சனின் தந்தை.
குடும்பத்தில் மொத்தம் 6 குழந்தைகள். ஜார்ஜ் ஸ்டீபென்சன்(George Stephenson) நிலக்கரி சுரங்கத்தின் வாசனையை சுவாசித்தபடி வளர்ந்தார். குடும்ப கஷ்டத்தை உணர்ந்த ஸ்டீபென்சன் தனது எட்டு வயதில் பள்ளிக்கு செல்ல வசதியின்றி பசுக்களை மேய்க்க கிளம்பினார். நாள் ஒன்றுக்கு கூலி 2 பென்ஸ். வறுமை வாட்டினாலும் அச்சிறு வயதிலேயே திடகாத்திரமாய் சுறுசுறுப்பாய் இருந்தார். புதிது புதிதாய் எதையும் தெரிந்து கொள்ளும் ஆர்வம் இருந்தது. இரண்டு ஆண்டுகள் பசுக்களை மேய்த்த அவர் 10 வயதில் தோட்டக்காரனாய் ஒரு பண்ணையில் வேலைக்குச் சேர்ந்தார்.
நாள் ஒன்றுக்கு கூலி - 4 பென்ஸ் . அவ்வயதிலேயே பகலில் மட்டுமின்றி இரவிலும் ஆர்வத்தோடு சோர்வின்றி வேலை செய்து வந்தார். பள்ளிப்படிப்பை அறியாத அவர் ஓய்வு நேரங்களில் படித்தவர்களிடம் பாடம் கேட்டு படித்துக் கொண்டார். படிப்பின் மேல் இருந்த ஆர்வத்தால் நிறைய நூல்களை படித்தார். ஜார்ஜ் ஸ்டீபென்சன்(George Stephenson) வாட்டசாட்ட இளைஞனாக வளர அவருக்கு நிலக்கரி சுரங்கத்தில் வேலை கிடைக்க சந்தோஷப்பட்டார். குறிப்பாய் அங்கு கரி இழுக்கும் இஞ்ஜினை ஓட்டுவது அவருக்கு கிடைத்த பெரும்பணி. அதை ஆர்வத்தோடு செய்தார்.
இருப்புப்பாதைகள் பற்றிய ஆராய்ச்சி :
மற்றவர்கள் போல இஞ்ஜினை ஓட்டினோமா வேலையை முடித்தோமா என்றில்லாமல் அந்த இஞ்ஜினை நன்கு ஆராய்ந்தார். அதிலுள்ள ஒவ்வொரு உறுப்புகளின் பணிகளை அறிந்து கொண்டார். அவர் காலத்தில் நிலக்கரி சுரங்கங்களில் வெட்டி எடுக்கப்படும் நிலக்கரிகளை மரத்தண்டவாளத்தின் மூலம் மேலே கொண்டு செல்ல மட்டுமே இஞ்ஜின் பயன்படுத்தப்பட்டு வந்தது.
மரத்தண்டவாளத்தில் குதிரைகளே இழுத்துச் சென்றன. இஞ்ஜினானது ஒரே நேர்கோட்டில் மேலே லிப்ட்போல சென்று வந்தது. அந்த நேரத்தில் நெப்போலியன் போர் தொடுத்தார். ராணுவத்திற்கு ஆட்களும், குதிரைகளும் தேவைப்பட்டதால் சுரங்க பணியாளர்களும், குதிரைகளும் யுத்தத்திற்குச் சென்றனர்.
நிலக்கரி பணி தடைபட அதன் விலை வானை முட்டியது. குதிரைகள் இல்லாததால் நிலக்கரிகள் தேங்கி கிடந்தன. அங்கு பணி புரிந்த பிளாகெட் என்ற இளைஞன் குதிரைக்கு மாற்றாக இஞ்ஜினை இணைத்தார். ஆனால் வண்டி அசையவில்ல, இதை பார்த்தார் ஸ்டீபென்சன். இன்ஜினை இயக்க முயன்றார். முடியவில்லை. இரண்டு மூன்று முறை முயற்சித்தான். இன்ஜின் அசையவில்லை.
இஞ்ஜினை ஓட செய்யலாம் என்று சிந்தித்து செயல்படுத்தினார். ஆம் 1818 - ஆம் ஆண்டு மணிக்கு 4 மைல் வேகத்தில் இஞ்ஜின் நிலக்கரி நிரப்பிய வண்டிகளை ஓட விட்டார். முதன் முதலில் மரத்தண்டவாளத்தில் இஞ்ஜின் ஓடியது மாபெரும் சாதனைதானே இஞ்ஜின் பளு தாங்காமல் அடிக்கடி
மரத்தண்டவாளங்கள் நாங்கின.
ஜார்ஜ் ஸ்டீபென்சன் கண்டுபிடிப்பு;
இதற்கு மாற்று வழியை யோசித்தார் ஸ்டீபென்சன் மேலும் குறுகிய இருப்புப்பாதைகளுக்கு பதிலாக நீண்ட தூரம் பாதையை அமைக்க முடிவு செய்தார்கள். டார்லிங்க்டன் என்ற நிலக்கரி சுரங்கத்திலிருந்து டீஸ் நதிமேல் ஸ்டாக்டன் துறைமுகம் வரை 20 மைலுக்கு இருப்புப்பாதை அமைக்க முயன்றார்கள், ஆனால் அவர்களால் முடிக்க இயலவில்லை .
ஸ்டிபென்சன்னுக்கு அந்த வேலையை கொடுத்தார்கள். அவர் அமைத்த இருப்புப் பாதையில் இஞ்ஜின் அருமையாக ஓடியது. மான்செஸ்டரிலிருந்து லிவர்பூலுக்கு ஒரு இருப்புப் பாதை அமைக்க முடிவு செய்தார்கள். அதில் சரக்குகளை இழுத்து செல்ல இஞ்ஜினை தயாரிக்கவும் அரசு முடிவு செய்தது. பொதுமக்கள் வாழும் பகுதியில் ஓவென்று கத்தும் இஞ்ஜினை ஓடக்கூடாது என மக்கள் கடுமையாக எதிர்த்தனர்.
அந்த எதிர்ப்பைக்கண்டு கவலைப்படாமல் எதிர்கால முன்னேற்றத்தை கவனத்தில் கொண்டு 1830 - ஆம் ஆண்டு மணிக்கு 29 மைல் வேகத்தில் செல்லக்கூடிய ராக்கெட் என்ற இஞ்ஜினை தானே உருவாக்கி, தானே அமைத்த இருப்புப்பாதையில் ஓடவிட்டார் ஸ்டீபென்சன். அரசு இஞ்ஜினின் பயனை அறிந்து பல இடங்களில் இருப்புப்பாதைகள் அமைக்கப்பட்டன.
இதற்கு தலைமை தாங்கி செயல்படுத்தியவர் ஸ்டீபென்சன். இஞ்ஜின்கள் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்காமல் எந்தெந்த இடங்களில் நிறுத்த வேண்டும் ? எப்படி நிறுத்த வேண்டும் ? நிறுத்தும் இடங்களில் பணியாட்கள், கைகாட்டி என பல அமைத்துக் கொடுத்தார்.
ஜார்ஜ் ஸ்டீபென்சன் சாதனை :
இஞ்ஜினின் ஓடும் வேகத்திற்கு ஏற்ப இருப்புப்பாதைகளை அமைத்துக் கொடுத்தார். வெறும் சரக்குகள் மட்டும் போகாமல் மக்களையும் அதில் ஏற்ற வேண்டிய இடத்திற்கு அவர்களை ஏறி, இறங்கவும் செய்யலாம் என்றும் சிந்தித்தார். இன்று அளவில்லா கோடிகளை வருவாயாக கொடுக்கும் இஞ்ஜின்கள் இருப்புப்பாதைகள் இவைகளுக்காக உழைத்த அவரை உலகமே தலைமேல் வைத்துக் கொண்டாடியது.
ஜார்ஜ் ஸ்டீபென்சன் மறைவு :
ஏழ்மையில் பிறந்தாலும் தனது அயராத உழைப்பால் இன்றைய ரயில்வே துறைக்கு போக்குவரத்திற்காக உழைத்த அந்த பெருமகன் 1848 - ஆம் ஆண்டு இவ்வுலகைவிட்டு மறைந்தார்.
இன்றைக்கு மணிக்கு 500 கி.மீ வேகத்தில் இஞ்ஜின் பறந்தாலும் அதற்கு மூலகாரணமாக இருந்த ஜார்ஜ் ஸ்டீபென்சனை(George Stephenson) நாம் என்றென்றும் நினைத்து வாழ்வோம் மீண்டும் அடுத்த பதிவில் பார்ப்போம் நன்றி வணக்கம்.