அறுவை சிகிச்சை அறிமுகம்
இன்று நோய்ப்பட்ட உறுப்பை அறுவை சிகிச்சை (Surgery) செய்து அகற்றுவதும், அவ்வுறுப்பிலேயே சிகிச்சை செய்து தைப்பதும், மாற்று உறுப்புக்களை பொருத்துவதும் சர்வசாதாரணமான ஒன்று. தாயின் கருவிலேயே குழந்தைக்கு அறுவை சிகிச்சை (Surgery) செய்யும் அளவிற்கு மருத்துவ உலகம் விஞ்ஞானம் உயர்நிலையை எட்டி விட்டது.
ஆனால் சுமார் 500 வருடங்களுக்கு முன் மனித உடல் அறுவை சிகிச்சையை எண்ணிப் பாருங்கள். இன்றைய உடல் அறுவை சிகிச்சைகளுக்கெல்லாம் முன்னோடிகள் பலர் இருந்தாலும் அவர்களுக்கெல்லாம் நாயகனாக திகழ்ந்தவர் பல இன்னல்களையும் கொடுமைகளையும் அனுபவித்து மனித உடல் ஆய்வை நடத்திய மாமேதை யார் என்றால் அவர் ... ஆண்ட்ரியஸ் வெசேலியஸ் (Andreas Vesalius) என்பவர் ஆவார்.
ஆண்ட்ரியாஸ் வெசாலியஸ் இளமைப்பருவம் :
மனித உடலில் சிறு கீறல் கூட படக்கூடாது என்ற மதக்கோட்பாட்டையே தகர்த்தவர். ஆனால் அதற்காக அவர்பட்ட வேதனைகள் ஏச்சுபேச்சுகள் ஏராளம் ஏராளம் மக்கள் சமூகத்திற்காக தன்னை அர்ப்பணித்த மேதையான வெசேலியஸ் கி.பி. 1515 - ஆம் ஆண்டில் ஸ்பெயின் நாட்டில் பிறந்தார். இவரின் முன்னோர்கள் பலர் மருத்துவ மேதைகளாக திகழ்ந்தவர்கள்.
இவருடைய தந்தை அரண்மனை மருத்துவர் ஐந்தாம் சார்லஸ் மன்னரின் மருத்துவர் ஆவார். மருத்துவ குடும்பத்தில் வளர்ந்ததால் அவருக்கும் மருத்துவராகும் விருப்பம் இருந்தது; இவர் சிறுவர்களோடு விளையாடுகையில் தன்னை மருத்துவராக பாவித்து காய்ச்சலா ... தலைவலியா ... கால்வலியா .. என்று நண்பர்களை சோதித்து 'மருந்து' என சிறுசிறு கற்களை கொடுப்பார்.
இவர் சிறுவயதிலேயே மிகவும் தைரியசாலியாக இருந்தார். பூச்சிகளை பிடித்து அவற்றை அறுத்து உள் உறுப்புக்களை பார்ப்பார். அதை குறித்துக் கொள்வார். சற்று வளர்ந்த டீன்ஏஜ் பையனாக வளர்ந்தபோது இறந்து கிடக்கும் பெருச்சாளிகள் ... நாய் ... பூனைகள் ... எலி ... இவைகளை அறுத்து அதன் உள்ளுருப்புகளை சோதனை செய்வார். இதேபோல் இறந்த மனிதர்களை அறுத்து பார்த்து சோதனை செய்ய வேண்டும் என்று நினைப்பார்.
ஆனால் அது நடவாத காரியம் என்பதையும் உணர்ந்தார். அவர் மருத்துவக் கல்வியை லூவென் பல்கலைக் கழகத்திலும் பின்னர் பாரீஸ் பல்கலைக்கழகத்திலும், கடைசியாக பாடுவா நகரின் பல்கலைக்கழகத்திலும் கற்று முடித்தார். அங்கும் அவர் உடலின் உள்ளுறுப்புகளின் செயல்களைப் பற்றியே அதிகம் படித்தார்.
அறுவை சிகிச்சை பற்றிய ஆராய்ச்சி:
மற்றவர்கள் கூச்சப்படும் அப்படிப்பை விரும்பியே படித்தார் காரணம் உடலின் உள்ளுறுப்பால்தான் நோய்கள் மனிதர்களுக்கு வருகின்றன என்றார். தலைவலி ,காய்ச்சல் , எதுவாக இருப்பினும் தோலால் மூடப்பட்டிருக்கும் உள்ளுறுப்பை ஏதோ ஒன்று தாக்குவதால்தான் ஏற்படுகிறது ...
எனவே உள்ளுறுப்பை சரியான முறையில் கவனிக்க இறந்த மனிதனின் உடம்பை அறுத்து பார்க்க வேண்டும் என்றார். அவர் காலத்தில் இறந்தவர் உடலை அறுப்பது மதத்தை மதிக்காத அபகாரியம். எனவே எவரும் இறந்தவர் உடலை தொடமாட்டார்கள். ஆனால் வெசேலியஸ் இறந்தவர் உடலை அறுத்துப் பார்த்தால்தான் நோய்களின் தன்மையை அறிய முடியும் என்று கூறினார்.
இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அவர் அறுவை சிகிச்சை (Surgery) பற்றி பல நூல்கள் எழுதினார். அவரின் நூலுக்கு கடும் எதிர்ப்பு நிலவியது. வெசேலியஸ் கடவுளுக்கு எதிராக செயல்படுகிறார் என்று அவர் மீது குற்றம் சாட்டினர். அவர் விலங்குகளை அறுத்து சோதனை செய்து மனித உடலுக்கும், விலங்குகளுக்கும் உள்ள ஒற்றுமை, வேற்றுமைகளை வெளியிட்டார்.
மனிதர்களை அறுக்கும் கொடூர ராட்சஷனை பாடுவா பல்கலைக்கழகத்தில் (அப்போது அவர் அங்கு இரண சிகிச்சை பேராசிரியராக பணியாற்றி வந்தார்.) வைத்துக் கொள்ளக்கூடாது என்று அவரை எதிர்த்து பலர் கூக்குரல் கொடுத்தனர்.
அவரின் ஆராய்ச்சி சாலையில் இறந்த விலங்குகளை தூக்கி எறிந்தனர். கற்களையும் வீசினர். அவரை தாக்கவும் வந்தனர். முடை நாற்றம் வீசும் கழிவுகளை வீசினர். அவரை கொல்ல சிலர் வரவே ... உயிருக்கு பயந்த அவர் மன்னரிடம் அடைக்கலம் புகுந்தார். வெசேலியஸின் மருத்துவ திறனை உணர்ந்த மன்னர் அவரை தனது மகன் பிலிப்பின் உடம்பை பாதுகாக்கும் மருத்துவராக நியமித்தார்.
மனித உடலை அறுத்துப் பார்க்காமல் அவனுடைய நோயை பற்றி அறிவது முட்டாள்தனம் என்பதை உணர்ந்த அவர் இறந்த மனித உடலுக்காக அலைந்தார். கி.பி .200 - ம் ஆண்டில் இறந்த கேலன் என்ற மருத்துவர் 'வாலில்லா குரங்குகளை' அறுத்து மனித உடலுக்கான நோய்களை பற்றி கூறினார். மனித உடலை அறுப்பதற்கு மனிதர்களுக்கு உரிமையில்லை என்ற அவரின் வாதத்தை மதவாதிகள் கையாண்டனர்.
சுமார் 1300 ஆண்டுகளாக மனித உடலை சோதிக்க மதவாதிகள் விட்டதில்லை. இறைவன் படைத்த உடலை மனிதன் அறுப்பது இறைவனுக்கு செய்யும் துரோகம் என்று ஆராய்ச்சி மனப்பான்மையுள்ள மருத்துவ விஞ்ஞானிகளை கட்டிப்போட்டனர். வெசேலியஸ் கேலனின் வார்த்தைகளை மீறி மனிதனை அறுக்கிறார் என்பதாலேயே அவரை துரத்தினர்.
ஸ்பெயினுக்கு வந்த அவர் காடுகளில் மனித உடலுக்கு அலைந்தார். கிடைக்கவில்லை. 'பிணத்திருட்டு' பற்றி கேள்விப்பட்டார். சில திருடர்கள் பிணங்களை திருடி விற்பதாக கேள்விப்பட்டார். ஆனால் அவர்கள் விலை அதிகமாய் கூறினர்.
ஒருநாள் காட்டில் எலும்புக்கூடான உடலை கண்டு அதைக் கொண்டுபோய் ஆய்வு செய்தார் ... உள்ளுறுப்புகள் இல்லாத உடல். அதில் ஒன்றும் தெரியவில்லை. தூக்கு தண்டனை பெற்ற கைதிகளை சிறைக்கு பின் புதைப்பார்கள் என்பதை அறிந்த அவர் யாருக்கும் தெரியாமல் அவரே புதைக்கப்பட்ட மனிதனை தோண்டி எடுத்து ... தன் ஆராய்ச்சி சாலைக்கு தூக்கிக் கொண்டு போய் அறுத்துப் பார்த்து ஆய்வு செய்தார்.
விடிவதற்குள் வேறு இடத்தில் புதைத்து விடுவார். இவ்வாறு இரவோடு இரவாக பல மனிதர்களின் உடலை அறுத்து ஆய்வு செய்து குறிப்புகள் எழுதி வைத்தார். இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம், இரத்தக்குழாய்கள் அவற்றில் தொற்றியிருந்த நோய்கள் பற்றி எழுதினார்.
அவர் யாருக்கும் தெரியாமல் இரவில் பிணங்களை தூக்கிச் செல்வதை கண்ட சிலர் 'பேய் பிசாசு' என்று அவரைப் பார்த்து பயந்து ஓடினர். இவர் ஒருநாள் 'குழி' வெட்டுவதை கண்ட ஒருவன் அவரோடு பேசி தான் பிணங்களை தருவதாகவும் குறைந்த அளவே பணம் தந்தால் போதும் என்றான்.
வெசேலியஸ் ஒப்புக் கொண்டார். பல நாட்கள் அவன் பிணங்களை கொடுக்க ... இவர் ஆய்வு மேற்கொண்டார். இவர் தனியே செய்ததற்கு காரணம் மற்றவர்களுக்கு தெரிந்தால் ... மதவாதிகள் தன்னை கொன்று விடுவார்கள் என்ற பயம்தான். அவருக்கு வேட்டு வைத்தான் பிணங்களை கொடுத்த பாவி.
ஆம், வெசேலியஸ் என்ற மன்னரின் மருத்துவர் மனித உடல்களை திருடி அவைகளை அறுத்து சோதனை செய்கிறார் என்று மதத் தலைவரிடம் சொல்லி விட்டான் மனித சமூகம் நோயற்று வாழ வழிவகை செய்வதற்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்த மருத்துவ மாமேதை வெசேலியஸ் மதத் தலைவர் முன் நின்றார்.
மனித உடலை அறுப்பது மத விரோதம் தெரியாதா உனக்கு? "மதத் தலைவர் கேட்டார்" தெரியும் ... ஆனால் உயிரோடு வாழும் மனிதர்கள் நோயின்றி வாழ்வதற்காகத்தான் இறந்தவர் உடலை வாங்கி அறுத்து என்ன நோயால் பாதிக்கப்பட்டான் என்பதை ஆய்வு செய்து தெரிந்து ... நோயாளியாய் வருபவர்களுக்கு மருத்துவம் பார்த்தேன் ... "என்றார் வெசேலியஸ்" நீ செய்தது இறை துரோகம் ... மத நம்பிக்கையின் துரோகம் ... உடனே நாட்டை விட்டு வெளியேறு. இல்லையேல் மரண தண்டனை தான் என்றார் மதத்தலைவர்.
ஆண்ட்ரியாஸ் வெசாலியஸ் மறைவு :
மன்னரிடம் கூறினார் மதத்தலைவரின் வாக்கை மீற அவருக்கு தைரியமில்லை. மனம் நொந்த வெசேலியஸ் நாட்டை விட்டு வெளியேறினார். செல்லும் இடமெல்லாம் அவரை துரத்தினர் 15 அக்டோபர் 1564 - ஆம் ஆண்டு அவர் எங்கோ அனாதையாய் இறந்ததாக வரலாறு. மனித சமூகம் நோயின்றி வாழ அறுவை சிகிச்சை (Surgery) மருத்துவத்தை உலகிற்கு அறிமுகப்படுத்திய மாமேதையின் மரணம் கொடுமை. இன்றைய அறுவை சிகிச்சைக்கு (Surgery) முன்னோடியான அவரை என்றென்றும் நினைவில் கொள்வோம் மீண்டும் அடுத்த பதிவில் பார்ப்போம் நன்றி வணக்கம்.