பி.வி.சி. (PVC) உருவான வரலாறு
ஒரு காலத்தில் வீட்டிற்கோ, கிணற்றிலிருந்து மேல் நீர் தேவை எனில் 'சிமெண்ட்' குழாய்கள் உபயோகப்படுத்தப்பட்டன. பின்னர் இரும்பு குழாய்கள்... வீடு... நிறுவனங்களில் பயன்பாட்டிற்கு வந்தன... இரும்பு குழாய்கள் காலப்போக்கில் 'துரு' பிடித்தன. தண்ணீரில் துருக்கள் கலந்து மக்களை இம்சை செய்தது. எத்தனை அடி உயரத்திலிருந்தும் தண்ணீரை 'டேங்கி'லிருந்து வீட்டிற்குள் பல 'குழாய்கள்' மூலம் பயன்படுத்துகிறோம். அதேபோல கிணற்றிலிருந்து, 'போர்வெல்' மூலமே... தண்ணீரை 'டேங்க்'கிற்கு கொண்டு செல்லவும் குழாய்களை பயன்படுத்துகிறோம். அந்த 'குழாய்'கள் வளைவாகவும், 'ப' வடிவிலும், இணைப் (Cobling) பாகவும் பயன்படுத்துகிறோம்.
இன்று உலகம் முழுக்க கட்டிடங்கள் ... நிறுவனங்கள் சிறிய மின் உபயோகத்திற்காகவும், நீர் உபயோகத்திற்காகவும் மற்றும் பலவகையான உபயோகத்திற்காகவும் பயன்படும் அற்புதமான குழாய்கள் 'PVC' பைப்கள் என்று அழைக்கிறோம். இந்த குழாய்கள் இல்லாமல் இன்று மனித வாழ்க்கையே இல்லை என்ற அளவிற்கு பயன்பாட்டில் உள்ளன. இரும்பு குழாய்கள் கனமாகவும், தூக்கிச் செல்வதற்கு மிக பளுவாகவும், மண்ணில் புதைத்தால் துருபிடித்து சிறிது காலத்திற்குள் பயனற்று போவதாக உள்ளதால்... இதற்கு மாற்றாக தூக்குவதற்கு சிரமப்பட வேண்டாததாகவும், பொருத்துவதற்கு எளிதாகவும், எவ்வளவு உயரத்திற்கு வேண்டுமானாலும் தூக்கிச் செல்வதற்கு எளிதாக உள்ளதாகவும் இரும்புக்கு மாற்றாக 'பிவிசி' (PVC) குழாய்கள் கண்டுபிடிக்கப்பட்டன. பாலிவினைல் குளோரை என்ற பிவிசி (PVC) குழாய்களை கண்டுபிடித்த மேதை 'வால்டோ செமான்' ஆவார்.
வால்டோ செமான் (Waldo Semon) இளமைப்பருவம் மற்றும் கண்டுபிடிப்புகள்
இவர் 1898 - ஆம் ஆண்டு அமெரிக்காவில் அல்பாமா நகரில் பிறந்தார். உள்ளூரில் பள்ளி உயர் கல்வியை கற்று முடித்தார். வேதியியல் துறையில் ஆர்வப்பட்ட அவர் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் வேதியியல் துறையில் பட்டம் பெற்று வந்தார். அவர் உயர் மதிப்பெண்கள் கொண்ட கல்வித்தகுதிக்கு பி.எஃப் குட்ரிச் என்ற ரசாயன பரிசோதனை நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார். அங்கு அவரின் சீஃப்பாக புதியன கண்டுபிடிப்பதில் ஆர்வமுடைய ஹாரி டிரம்புல் என்பவர் இருந்தார். அவர் ரப்பர் பொருட்களையும், உலோகத்தையும் இணைப்பதில் மும்முரமாக ஈடுபட்டிருந்தார். ஆனால் அவரால் அவைகளை ஒன்று சேர்க்க முடியவில்லை.
ரப்பரை மிகவும் 'ஜவ்வாக' மெல்ட் - உருக்கி உலோகத்தின் உள்ளும், மேற்புறமும் 'பூசி'யும் அது ஒட்டாமலேயே நழுவி நழுவிப் போனது. ஹாரி தனது உதவியாளரான செமானை அழைத்து ரப்பரையும், உலோகத்தையும் கலந்து புதிய பொருளை உருவாக்கும்படி கேட்டுக் கொண்டார். ரப்பரை உருக்கி உலோகத்தின் மேல் பொருத்தவே முடியாது என்பதை செமான் அறிவார். வேண்டுமானால் ரப்பரை உலோகத்தின் மேல் சுற்றலாம். ஒட்ட வைப்பது இயலாத காரியம். இயலாத காரியத்திற்காக நேரத்தை செலவிட செமான் விரும்பாததால் வேறு உருவாக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அதாவது 'பாலிமர்' என்ற செயற்கை வேதியியல் பொருளைக் கொண்டு, எதாவது ஒன்றை தயாரிக்கலாம் என்று முயற்சி மேற்கொண்டார்.
அவர் காலத்தில் 'பாலிமர்' என்ற ரசாயனப் பொருளை எவரும் விரும்பி தங்கள் சோதனைக்கு உட்படுத்த மாட்டார்கள். காரணம் அது நெகிழாத தன்மை கொண்டதாலேயே. ஹாரி டிரம்புல் ஆலோசனையின் பேரில் பாலிமரை ஒரு திரவத்தில் போட்டு, சூடாக்கினார் செமான். பசை போன்று வந்தது, அதை உலோகத்தின் மேல் பூச்சாக்கினார் ஒட்டவில்லை. ஆனால் பாலிமர் பசையை வேறு ஒன்றுக்கு பயன்படுத்தினால் என்ன என்று சிந்தித்தார். பாலிமரின் மூலம் தீவிர ஆராய்ச்சி செய்தார். அதை 'பிவிசி' (PVC) என்ற தன்மைக்கு கொண்டு வந்தார். இளகும் - நெகிழும் தன்மையும் கொண்ட இப்பொருளைக் கொண்டு பல் உப்யோகத்திற்கு பயன்படுத்தலாம் என்று நம்பி செயல்பட்டார். வெற்றி அவரை நோக்கி வந்தது.
சிறு சிறு குழாய்கள் 'கப்'புகள் தட்டுகள், இணைப்பு சிறு குழாய்கள் (பல அளவுகளில்) மின் கம்பிகளுக்கு பாதுகாப்பாக மேல் பூச்சு செமான் கண்டுபிடித்த 'பிவிசி'(PVC)யின் பயன்கள் மெல்ல மெல்ல வெளி உலகிற்கு பரவியது. அதை அவர் நீள நீள குழாய்களாய்... பெண்டுகள் ,கப்ளிங்குகள், தண்ணீர் திறப்பு குழாய்கள் என்று நூற்றுக்கணக்கான பயன்பாட்டிற்காக உருவாக்கினார். மாடி வீடுகள் கட்டும் நிறுவனங்கள் இரும்பு குழாய்களை பயன்படுத்தி மிகவும் சிரமப்பட்டனர்.
விலையும் அதிகம் கிடைப்பதும் கஷ்டம். 'பிவிசி' (PVC) பொருட்கள் விலை மலிவானவை பழுதடைந்தால் மாற்றுவதற்கும் சுலபம். எத்தனை வடிவங்களிலும் தயாரிக்கலாம். எடுத்துச் செல்வதிலும் சிரமம் இல்லை. பி.வி.சி (PVC) இல்லாமல் இன்றைய மனித வாழ்க்கை இல்லை என்ற அளவிற்கு பயன்பட்டு வருகிறது. தனது அயராத உழைப்பால்... உலகமே பயன்படுத்தும் உன்னத பொருளை கண்டுபிடித்த செமான்(Semon)... 1999 - ஆம் ஆண்டு இவ்வுலகை விட்டு மறைந்தார். செமானின் (Semon) உடல் மறைந்தாலும் அவர் நாம் பயன்படுத்தும் பி.வி.சி.(PVC)க்குள் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதே உண்மை.