வானொலி அறிமுகம்:
இன்று நாம் செல்போனில் பாடல்கள், செய்திகளை எஃப்.எம் வானொலி மூலம் கேட்டு மகிழ்கிறோம். மெமரி கார்டு மூலம் பாடல்கள் , படக்கதைகளை காதில் வாங்கியை பொருத்தி அதன் மூலம் கேட்கிறோம். இதற்கெல்லாம் ஆதிகர்த்தா யார் என்றால் மார்க்கோணிதான். கம்பியற்ற தகவல் தொடர்பு முறையான வானொலிக்கு வித்திட்ட மார்க்கோணி.
இளமைப் பருவம்:
இத்தாலி நாட்டில் போலக்னோ என்ற ஊரில் கைசப் மார்க்கோணி ஆனி ஜேம்சன் தம்பதியர்க்கு 1874 - ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 25 - ம் நாள் பிறந்தார். பெரும் செல்வந்தர் குடும்பத்தைச் சேர்ந்த இவருக்கு, வீட்டிலேயே கல்வி புகட்டப்பட்டது. வீட்டிலேயே பெரிய நூலகம் இருந்தது. அவருக்கு இயற்கையாகவே இயற்பியலில் ஆர்வம் ஏற்பட்டது.
குறிப்பாக மின்சாரம், மின்காந்தம் சம்பந்தமான விஷயங்களில் பெரும் ஆர்வம் உண்டானது. 15 வயதில் மின் அலைகள் பற்றியும் படித்து அறிந்தார். மின் அலைகளானது ஆகாயத்தில் அலைகளாக எங்கும் பரவி பல மாறுதல்களை ஏற்படுத்துகின்றன என்பதை 18 - ம் நூற்றாண்டின் முற்பகுதியில் பல விஞ்ஞானிகள் கண்டு வெளிப்படுத்தினர். ஆம் மார்க்கோணி பிறப்பதற்கு முன்பே மின்சார அலைகளைப் பற்றி பலர் ஆய்ந்து அதனின் செயல்பாடுகள் பற்றி வெளிப்படுத்தி உள்ளனர். மாஸ்க் என்ற அறிவியல் ஆய்வாளர் மின்சார அலைகளின் மூலம் பணிகளை செய்யும் இயந்திரத்தைப் பற்றி 1835 - ல் வெளியிட்டார். இவருக்கு முன்பே ஜேம்ஸ் கிளார்க் டாக்ஸ்வெல் என்ற மேதை மின் அலைகளின் பணிகள் குறித்து முதன்முதலில் வெளியிட்டு அறிவியல் உலகை வியக்க வைத்தார்.
$ads={1}
வார்லி சகோதரர்கள் விண்ணில் தோன்றும் மின்னல் மற்றும் மின் அலைகள் எந்தவித சேதத்தையும் மின் இயந்திரங்களுக்கு ஏற்படுத்தாதவாறு ஒரு இயந்திரத்தை உருவாக்கினர். இவர்கள் மட்டுமின்றி அமெரிக்காவைச் சேர்ந்த சாமுவேல் மார்ஸ் என்பவர் நீரின் மூலமாகவும் மின்சாரத்தை வேகமாக அனுப்ப முடியும் என்பதை ஆய்வு மூலம் விளக்கினார். காற்றின் மூலமாகவும் மின்சாரத்தை அனுப்ப முடியும் என்பதை டேவில் எர்வர்ட் ஹ்யூஸ் என்பவர் பலர் முன் நிரூபித்துக் காட்டினார். ஆனால் யாரும் ஏற்றுக் கொள்ளாததால் அதன்பின் அவர் தொடர்ந்து அதில் ஈடுபடவில்லை.
இவர்களைத் தவிர இங்கிலாந்தைச் சேர்ந்த ஆலிவர்லாட்ஜ், ருஷ்யாவைச் சேர்ந்த அலெக்சாண்டர் போப்பாஃட் போன்றவர்கள் மின் அலைகள் பற்றி பல்வேறு ஆய்வுகளை நிகழ்த்தினர். மார்க்கோணிக்கு 15 வயது ஆனபோது அவர் லெக்ஹார்ன் பல்கலைக்கழகத்திற்கு படிக்கச் சென்றார். அப்போது அவர் புகழ்பெற்ற ஹெர்ட்சின் மின்காந்த அலைகளைப் பற்றிய ஆய்வுகளை படித்து மின் அலைகளின் மேல் நாட்டம் கொண்டார். மின் அலைகளை ஒரு கட்டுக்குள் கொண்டு வந்து அதன் மூலம் பல நற்காரியங்களை மனித வாழ்க்கைக்கு பயன்படுத்த முடியும் என்பதை உணர்ந்தார் மார்க்கோணி.
வானொலி கண்டுபிடிப்பு:
மின்சார அலைகள் மூலம் தந்திகளை வேகமாய் அனுப்ப முடியும் என்பதை ஆய்ந்து தெளிவுபடுத்தினார். 1894 - ஆம் ஆண்டு இந்திய தாவரவியல் விஞ்ஞானி ஜெகதீஸ் சந்திரபோஸ் அவர்கள் மின்காந்த அலைகளைக் கொண்டு வானொலி ஒலிபரப்பை உருவாக்கலாம் என்று கண்டறிந்தார். ஆனால் இதைப் பற்றிய ஆய்வை அவர் தொடர்ந்து செய்யவில்லை என்று சொல்லப்படுகிறது. மின்காந்தம் -மின் அலைகள் இவைகள் மூலம் வானொலி மூலம் மனித செய்திகளை வெளி உலகிற்கு தெரியப்படுத்தலாம் என்று ஆய்ந்து வெளிப்படுத்தினார் மார்க்கோணி. இந்த ஆய்வுக்காக அவர் கடினமாக உழைத்தார். அவரின் ஆய்வை இத்தாலி நாடு ஏற்கவில்லை. தனக்கான இடம் இங்கிலாந்து என்பதை உணர்ந்தார்.
1896 - ஆம் ஆண்டு இங்கிலாந்து சென்றார். அங்கு அவர் வெஸ்ட் போர்ன்பார்க் என்ற பெரிய தோட்டத்தில் கம்பி இல்லாமல் மின் அலைகள் மூலம் வானொலி மூலம் செய்தியை மக்கள் அறியச் செய்ய தினமும் 18 மணி நேரம் உழைத்தார். கடினமான உழைப்பின் மூலம் வெற்றிக்கனியை பறித்தார். ஆம் இவ்வாண்டில்தான் ஒரு மைல் தூரத்திற்கு கம்பியில்லாமல் மின் அலைகள் மூலம் அவர் கண்டுபிடித்த வானொலி முதன் முதலாய் பேசியது. இதற்கு அவர் காப்புரிமை பெற்றார். உலகின் முதல் வானொலி ஒலிபரப்பை கேட்டு உலகமே வியந்து அவரைப் பாராட்டியது. இந்த வானொலி பரப்பை எப்படி நிகழ்த்தினார் ? அங்குள்ள தபால் ஆபிஸுக்கு சென்றார்.
அந்த ஆபீஸில் தலைமை இஞ்ஜினியராக இருந்த சர் வில்லியம் ப்ரீஸ் என்பவருக்கு தனது ஆய்வை செய்து காட்டினார். மார்க்கோணியின் வானொலி ஆய்வை கண்டு அவரை பாராட்டினார். மின் அலைகள் மூலம் செய்தி ஒலிபரப்பை கேட்டு மகிழ்ந்தார். இந்த வானொலி ஆய்வை பலரும் கேட்கும்படி செய்தார். மீண்டும் இவ்வாய்வை லண்டன் தபால் ஆபீஸ் மாடி மீது பல பெரிய மனிதர்கள் முன் செய்து காட்டினார். சுமார் 100 மீட்டர் தூரத்திற்கு வானொலி மூலம் செய்திகள் ஒலிபரப்பப்பட்டது.
$ads={2}
மேலும் கம்பியில்லா தந்தி மூலமும் செய்திகள் அனுப்பப்பட்டன. கப்பல்களில் இந்த கம்பியில்லா தந்தி சாதனங்கள் பொருத்தப்பட்டன. 1900 - ஆம் ஆண்டு வெகு தூரத்திற்கு செய்தியை அனுப்பும் வானொலி நிலையத்தை உருவாக்கினார் மார்க்கோணி. சுமார் 200 அடி உயர கம்பத்தைக் கொண்டு அதனோடு கம்பியை இணைத்து வானொலி ஒலிபரப்பை நிகழ்த்திக் காட்டினார். 1901 - ஆம் ஆண்டு , ஜனவரி மாதம் உடைந்த ஒரு கப்பலிலிருந்து வேறொரு கப்பலுக்கு செய்தி அனுப்பியதால் பல உயிர்கள் துரிதமாக மீட்கப்பட்டன.
மறைவு :
மார்க்கோணியின் வானொலி ஒலிபரப்பு புகழ் பெறத் தொடங்கியது. அவர் இதை வியாபாரமாக்கி செல்வந்தரானார். இவரின் இந்த அற்புத செயலைக் கண்ட அமெரிக்க அரசு தங்களுக்கும் கம்பியில்லா தந்தி துறை, வானொலி நிலையம் இவைகளை ஏற்படுத்திக் கொடுக்கும்படி கேட்டது. இவரின் சாதனை கண்ட ஆக்ஸ்போர்டு, கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகங்கள் கெளரவ டாக்டர் பட்டங்களை வழங்கி சிறப்பித்தன.1909 - ஆம் ஆண்டு பெர்டினாட் பிரவுன் என்ற விஞ்ஞானியோடு சேர்ந்து இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. மின்காந்த அலைகள் மூலமும், மின் அலைகள் மூலமும் தந்தியையும், வானொலியை கண்டுபிடித்த விஞ்ஞானி மார்க்கோணியால் இன்று உலகம் முழுவதும் வானொலி மூலம் உலக நடவடிக்கைகளை உடனுக்குடன் அறியச் செய்து சாதனை படைத்திருக்கிறார். வானொலி மூலம் அரிய படைப்பைத் தந்த அவர் 1937 - ஆம் ஆண்டு இவ்வுலகை விட்டு மறைந்தார். எனினும் அவரின் கண்டுபிடிப்பால் என்றும் வாழ்வார்.