அனஸ்தீசியா அறிமுகம்:
சுமார் 120 ஆண்டுகளுக்கு முன்பு அறுவை சிகிச்சை என்றால் மருத்துவரால் சாகடிக்கப்படப் போகிறோம் என்ற எண்ணத்தோடுதான் போக வேண்டியிருக்கும். ஏனென்றால் அன்றைய காலகட்டத்தில் அறுவை என்றால் கசாப்பு கடை போலதான் பெரும் கொடுமை. ஒருவருக்கு விரலில் சிறு அடிபட்டதென்றால் விரலையே வெட்டிவிடுவார்கள். வெட்டப்படும்போது வலி இருக்குமே என்று மருத்துவர் கவலைப்படமாட்டார். அவருக்கு வெட்டுவது மட்டுமே வேலை. அக்கால மக்கள் நோய்வாய்ப்பட்டால் மிகவும் துன்பத்திற்கு ஆளாவார்கள். வெளிப்புறம் அறுவை சிகிச்சையை கூட பல்லை கடித்துக் கொண்டு சமாளிக்கலாம். உள் உறுப்புகளில் அறுவை என்றால் மரணம்தான். இந்த நிலைமை அப்போது இருந்தது. இப்போது அந்த நிலை இல்லை. அன்று 100 அறுவை சிகிச்சையில் 90 பேர்கள் மரணத்தை அடைந்தார்கள்.
$ads={1}
இன்றோ 100 க்கு 98 வெற்றி அடைகிறது. காரணம் அனஸ்தீசியா என்ற மயக்கமருந்தின் கண்டுபிடிப்பே. அறுவை சிகிச்சை செய்யும் முன்பு மயக்க மருந்துக்கென்று ஒரு மருத்துவர் இருக்கிறார். நம் உடம்பு அறுவைக்கு தாங்குமா என்றும், மயக்க மருந்து கொடுக்க தகுதியானவரா என்றும் பார்த்த பிறகே தியேட்டருக்குள் அனுமதிக்கிறார். இன்று பல கோடி அறுவை சிகிச்சைகள் சர்வ சாதாரணமாக நடக்கிறது என்றால் அதற்கு காரணம் அனஸ்தீசியா.
இளமைப் பருவம்:
இந்த மயக்க மருந்தைக் கண்டுபிடித்த மருத்துவ மேதை டாக்டர் வில்லியம் மார்ட்டன் அவர்கள். 1819 - ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 9 - ம் தேதி அமெரிக்காவில் மசாசூசட்ஸ் நகரில் , சாரிட்டன் என்ற இடத்தில் பிறந்தார்.
பெற்றோர் ஜேம்ஸ்போர்ட்டன், ரிபிக்கா. தந்தை விவசாய தொழில் செய்து வந்தார். எளிய குடும்பம். உள்ளூரில் கல்வி கற்ற அவர் சில காலம் கிளார்க்காகவும், பிரிண்ட்டராகவும், சேல்ஸ்மேனாகவும் பல தொழில்களை செய்த அவர் மருத்துவம் படிக்க விரும்பி பால்டிமோர் பல் மருத்துவக்கல்லூரியில் சேர்ந்து படித்து 1842 - ஆம் ஆண்டு, 23 - ம் வயதில் பல் மருத்துவராக வெளியே வந்தார். அவருக்கு வேலை தேவைப்பட டாக்டர் ஹொரேஸ்வெல்ஸ் என்பவர் நடத்தி வந்த பல் மருத்துவமனையில் வேலைக்குச் சேர்ந்தார். அங்கு பல் பிடுங்க வரும் நோயாளிகள் வலியுடன் துடிப்பதைக் கண்டார் மார்ட்டன்.
அனஸ்தீசியா கண்டுபிடிப்பு:
இவ்வாறு அவதிப்படும் நோயாளிகளின் வலியைப் போக்க ஒருவிதமான மயக்க மருந்தை கண்டுபிடித்திருந்ததால் வெல்ஸ் நைட்ரஸ் ஆக்ஸைடை மயக்க மருந்தாக கொடுத்து பல்லை பிடுங்கி வந்தார். என்றாலும் அது பூரணமாய் பல் பிடுங்கும்போது ஏற்படும் வலியைப் போக்கவில்லை. இதற்கு மாற்று வழிதான் என்ன என்பதை யோசித்தார் மார்ட்டன். அச்சமயம் ஈத்தர் என்ற ரசாயனப்பொருளை சார்லஸ் டி ஜாக்சன் என்பவர் வலி தெரியாமல் இருக்க பயன்படுத்தலாம் என்பதை அறிந்து செயல்படுத்தினார்.
ஈத்தர் என்பது நிறமற்ற திரவம் . எளிதில் தீப்பற்றும் சக்தியைக் கொண்டது . இதனை அறிந்த மார்ட்டன் ஈத்தரைக் கொண்டு திரவமாக இல்லாமல் வாயுவாக மாற்றினார். இந்த வாயுவை சுவாசிக்கும் நோயாளி வலியை உணராமல் இருப்பதை உணர்ந்தார். முதலில் தனக்கே ஈத்தர் வாயுவை கொடுத்துப்பார்க்க மயக்கமானார். உலகமே தெரியாத நிலை.
$ads={2}
இதை நிரூபிக்கும் வகையில் 1846 - ஆம் ஆண்டு பலர் முன்னிலையில் இவ்வாயுவை கொடுத்து ஒரு நோயாளிக்கு வலி இல்லாமல் பல் பிடுங்கி காண்பித்தார். இது மாய வேலை என்றது மருத்துவ உலகம். மருத்துவர்கள் பலரை ஒன்று கூட்டினார். தனது மருந்தை ஒரு நோயாளியின் மூக்கில் வைத்தார். அவர் மயக்கமானார். பல்லை எளிதாக பிடுங்கினார். அதை மருத்துவர்கள் அரைமனதுடன் ஏற்றுக் கொண்டனர். தனது கண்டுபிடிப்பிற்கு பலர் போட்டி போடுவதைக் கண்டு மனம் நொந்தார். குறிப்பாக உடனிருந்த ஹோரேஸ்வெல்ஸ், சார்லஸ் டி. ஜாக்சன் மற்றும் க்ராஃபோர்ட் வில்லியம்சன் ஆகியோர் அவர் மீது வழக்கு போட்டனர்.
மறைவு :
அந்த வழக்கில் வெற்றி பெற தனது சொத்துக்களை விற்று போண்டியானார். மனவேதனையோடு 1868 - ஆம் ஆண்டு , ஜூலை 15 - ம் நாள் இவ்வுலகை விட்டு மறைந்தார் அந்த மருத்துவமேதை. பலர் அன்று அனஸ்தீசியா மயக்க மருந்தை தாங்கள் கண்டுபிடித்ததாக கூறினாலும் இன்று இம்மயக்க மருந்தை கண்டுபிடித்த முன்னோடி என்று வில்லியம் மார்ட்டன் என்றே மருத்துவ உலகம் கூறும். இன்று எவ்வளவு கடினமான அறுவை சிகிச்சை என்றாலும் நோயாளிக்கு சிறிதளவு கூட வலியின்றி சிகிச்சை செய்கிறார்கள் மருத்துவர்கள் என்றால் அதற்கு மூலகாரணமான மார்ட்டனை நாம் நன்றியுடன் நினைப்போமாக.