ஒட்டும் பசை (Sticky glue)
கி.பி. 1750-ஆம் ஆண்டு காலத்தில் ஒட்டும் பசைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது. பிரிட்டனில் முதல் பசைப் பொருளுக்கான காப்புரிமை வெளியிடப்பட்டது. முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட பசையானது மீனிலிருந்து தயாரிக்கப்பட்டது. அதன் பிறகு, நாளடைவில் இயற்கை ரப்பர், விலங்குகளின் எலும்புகள், ஸ்டார்ச், பால் புரோட்டீன், மாவுப் பொருட்கள் மூலம் தயாரிக்கப்படும் பசைப் பொருளுக்கான காப்புரிமைகள் வெளியிடப்பட்டன.
சூப்பர் பசை - ரசாயனப் பசை (Super glue)
'சூப்பர் பசை' எனப்புகழப்படும் பசை மிகவும் வலுவாக ஓட்டக்கூடியது, 'சையனோ அக்ரிலேட்” (Cyano Acrylate) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த ரசாயனப் பசையை டாக்டர் ஹாரி கூவர் என்பவர் கண்டறிந்தார். 1942-ஆம் ஆண்டில், 'கோடாக்' நிழற் படச்சுருள் ஆய்வுக்கூடங்களுக்காக ஒரு பொருளை உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, டாக்டர் கூவர் இந்த சூப்பர் பசையைக் கண்டறிந்தார். ஆனால், லேசாகப் பயன்படுத்தும் போதே பயங்கரமாக ஒட்டிக்கொள்ளும் தன்மை இருந்ததால், சுவர் அந்தப் பசையை நாளடைவில் ஒழித்து விட்டார்.
1951-இல் இந்த சூப்பர் பசையை கூவர், 'டாக்டர் பிரட் ஜாய்னர்' என்பவருடன் சேர்ந்து சில மாற்றங்களுடன் மறுபடியும் கண்டுபிடித்தார். அப்போது கூவர், அமெரிக்காவின் கிழக்கு மத்திய மாநிலமான டென்னசியில் உள்ள ஈஸ்ட்மேன் கம்பெனியில் நடந்த ஆராய்ச்சி மேற்பார்வைப் பணியில் இருந்தார். கூவர் இறுதிக்கட்டமாக, சூப்பர் பசையை ஒரு பயனுள்ள தயாரிப்பாக மாற்றினார். 1958-இல் 'ஈஸ்ட்மேன்' கம்பெனியின் தயாரிப்பாக அந்தப் பொருள் "சூப்பர் க்ளூ' (சூப்பர் பசை) என்ற பெயரில் உலகச் சந்தைக்கு வந்தது.
செல்லோ டேப் (Cello tape)
கிழிந்த ரூபாய் நோட்டுகளை ஒட்ட, சுவர்களில் காகிதப் படங்களை ஒட்ட, பரிசுப்பொருள் பார்சல் செய்ய இப்படி பல்வேறு உபயோகங்களுக்கு நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்தான் 'செல்லோ டேப்'. இந்த டேப் முதன்முதலில் அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டது. 1930-ஆம் ஆண்டில், ரிச்சர்டுட்ரூ என்பவர் 'ஸ்காட்ச்' டேப்பைக் கண்டுபிடித்தார். 'ஸ்காட்ச்' என்பது பொருளுக்கு வைக்கப்பட்ட தொழிற்பெயர் (பிரேண்ட் நேம்) உலகின் முதல் செல்லோ டேப் (ஒட்டும் கண்ணாடித்தாள் இழை) ஸ்காட்ச்தான். முன்னதாக 1925-ஆம் வருடத்தில் ரிச்சர்டு ட்ரூ எழுத்தை அல்லது பொருளை மறைக்கும் மாஸ்கிங் டேப்பைக் கண்டுபிடித்திருந்தார்.
யார் இந்த 'ரிச்சர்டு ட்ரூ'?
இவர் ஓர் எஞ்ஜினியர். அமெரிக்க மாநிலமான மின்னிசோட்டாவின் தலைநகர் செயின்ட்பால் பகுதியில் அமைந்துள்ள 3M என்கிற கம்பெனியில் 1923-இல் வேலைக்குச் சேர்ந்தார். அந்த சமயத்தில், அந்தக் கம்பெனி மணற் காகிதத்தை மட்டும் தயாரித்து வந்தது. கெட்டியான அட்டை மாதிரியான தாளின் மேற்பரப்பில் மணல் தூளைத்தூவி ஒட்ட வைத்து தயாரிக்கப்படும் காகிதமே 'மணற்காகிதம் எனப்படுவதாகும். இதுவும் உப்புத்தாள் வகையைச் சேர்ந்ததுதான்.
ரிச்சர்டு. அந்தக் கம்பெனியில் மணற்காகிதப் பொருளை பரிசோதிக்கும் பிரிவில் இருந்தார். ஆட்டோ, கார் போன்ற மோட்டார் வாகனங்களுக்குப் பெயின்ட் அடிப்பவர்கள், பழைய எழுத்துக்களை அழிப்பதற்கு மணற் காகிதத்தால் தேய்த்து சிரமப்படுவதைப் பார்த்தார் ரிச்சர்டு. மேலும் அந்தப் பணிக்கு வெகுநேரம் ஆவதையும் அறிந்தார்.
இந்தப் பிரச்சினையில் கவனம் செலுத்தி, ரிச்சர்டு கண்டுபிடித்த பொருள்தான் 'மாஸ்கிங் டேப்'. 1925-இல் இந்த மாஸ்கிங் டேப்பைக் கண்டுபிடித்தது, வாகன பெயிண்டர்களின் கடின் வேலைப் பிரச்சினைக்கு ஒரு நல்ல தீர்வாக ஆனது. மாஸ்கிங் டேப் தயாரிப்பிலிருந்து, இன்னும் பல பயன்பாடுகளுடன் உருவானதுதான் 'செல்லோ டேப்' (Cellophane Tape), மாஸ்கிங் டேப் கண்டுபிடிக்கப்பட்டு, ஐந்து வருடங்கள் கழித்து 1930-இல் செல்லோ டேப் கண்டுபிடிக்கப்பட்டது. எண்ணெய்கள், ரப்பர் போன்ற பொருட்களிலிருந்து செல்லோ டேப் தயாரிக்கப்படுகிறது.
செல்லோ டேப்பைத் தொடர்ந்து, தேவையான டேப் அளவைத் துண்டாக்கி எடுத்துக்கொள்ளும் வசதியுடைய கருவியும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தக் கருவியில், ஒட்டும் தன்மையுடைய டேப் சுருளும், அதை வெட்டி எடுக்க ஏதுவாக பிளேடும் பொருத்தப்பட்டிருக்கும். இந்தக் கருவியை அதே கம்பெனியின் 'ஜான் ஏ. பார்டன்' என்ற இன்னொரு எஞ்ஜினியர் 1932-ஆம் ஆண்டில் கண்டு பிடித்தார்.
பேப்பர் கிளிப் (Paper clip)
ஒன்றுக்கு மேற்பட்ட தாள்களை ஒன்றாக இணைக்கப் பயன்படும் ஒரு சிறிய சாதனம்தான் 'பேப்பர் கிளிப்'. பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகங்களில் அன்றாடம் பயன்படுத்தும் பொருள் இது. 13-ஆம் நூற்றாண்டு காலத்தில் இன்றைய பேப்பர் கிளிப் கண்டுபிடிப்பதற்கு முன்னர் ரிப்பனைப் பயன்படுத்தினர் தாள்களின் இடதுபுற மேல்முனையில் சிறு துளை போட்டு ரிப்பன் போன்ற கயிறால் இணைத்துக்கட்டினர். அதன் பரிணாம் வளர்ச்சியாக மெழுகு தடவப்பட்ட கயிறு பயன் படுத்தப்பட்டது. அந்த முறை அடுத்த 600 வருடங்களுக்கு நடைமுறையில் இருந்தது.
1835-இல் நியுயார்க்கைச் சேர்ந்த மருத்துவர் ஜான் அயர்லாண்ட் ஹாவ் நேரான ஊசிகளைத் தயாரிக்கும் எந்திரத்தைக் கண்டுபிடித்தார். அதிலிருந்து ஊசிகளும் உதவின. ஆனால் ஊசி வடிவமைக்கப்பட்ட நோக்கமே தையலுக்காகத்தான். ஜான் வேலர் என்ற நார்வே நாட்டுக்காரர்தான் 1899-இல் பேப்பர் கிளிப்பைக் கண்டுபிடித்தார். அதற்கான காப்புரிமையை அதே ஆண்டு ஜெர்மனியிலிருந்து பெற்றார். ஏனெனில், அப்போது நார்வேயில் காப்புரிமை சட்டங்கள் இல்லை. எலக்ட்ரானிக்ஸ், அறிவியல் மற்றும் கணிதத்தில் பட்டம் பெற்றவர் ஜான் வேலர். கிளிப்பைக் கண்டுபிடித்த போது, அவர் உள்ளூரில் உள்ள ஒரு கண்டுபிடிப்பு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
1901-இல் நவீன பேப்பர் கிளிப் கண்டுபிடிப்புக்கான காப்புரிமையை அமெரிக்காவில் பெற்றார். ஒயரின் (Wire) கம்பித்துண்டு போன்ற ஓர் உலோகத்தால் உருவாக்கப்பட்டிருந்த அந்த கிளிப் முக்கோணமாகவும், செவ்வகமாகவும் வளைக்கப் பட்டிருந்தது. அதன் இறுதி பாகங்கள் மனித நாக்கு போல் அமைந்திருந்தன. இன்றைய பேப்பர் கிளிப்புகளின் ஆரம்பம் அதுதான். நவீன பேப்பர் கிளிப்புக்கான காப்புரிமை பெற்ற முதல் நபர் 'ஜான் வேலர்'. அமெரிக்கக் கண்டுபிடிப்பாளர் கார்னிலியஸ் ஜே.பிராஸ்னன் ஒரு வகை பேப்பர் கிளிப்புக்கான காப்புரிமைக்காக 1900-ஆம் ஆண்டு பதிவு செய்தார்.
அவர் தன் கண்டுபிடிப்பை 'கோனா கிளிப்' என அழைத்தார். அந்த வகை கிளிப்புகளை இங்கிலாந்தின் 'ஜெம் மேனுஃபேக்சரிங் லிமிடெட்' என்றொரு நிறுவனம் தயாரித்தது. இந்த நிறுவனம்தான் இரட்டை முட்டை வடிவ பிரபல பேப்பர் கிளிப்புகளை வடிவமைத்த முதல் நிறுவனம். இந்த வகை கிளிப்புகள் தான் இன்றும் 'ஜெம் கிளிப்' என்ற பெயரில் அழைக்கப்படுகின்றன.
கத்திரிக்கோல் (Scissors)
நம் அன்றாட வாழ்க்கையோடு ஒன்றிப் போய்விட்ட பொருட்களில் ஒன்று கத்திரிக்கோல். வீடு, அலுவலகம் மருத்துவமனை ஆகிய இடங்களில் கத்திரிக்கோல் கண்டிப்பாக இருக்கும். தையலகத்திலும் முடி திருத்தும் நிலையத்திலும் கத்திரிக்கோல் தான் முக்கிய கருவி. மிக உபயோகமான பொருளாக விளங்கும் இந்த கத்திரிக்கோல் எப்போது, யாரால் கண்டுபிடிக்கப்பட்டது? கத்திரிக்கோலின் பயன்பாடு மிகவும் பழங்காலத்திலேயே இருந்திருக்கிறது. கி.மு. 14-ஆம் நூற்றாண்டு காலத்தில் கத்திரிக்கோல் இருந்ததாக ஜீன்-கிளாடு குறிப்பிட்டுள்ளார். மார்கியூரன் என்ற எழுத்தாளர் தான் எழுதிய புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கி.மு. 3-ஆம் நூற்றாண்டில் எகிப்திய வெண்கலக் கத்திரிக்கோல்கள் நிகரற்ற கலைப்பொருளாக விளங்கின. கைவினைப் பொருள்களைத் தயாரிப்பதில் உபயோகமாக இருந்தன. மேலும் ஆண்கள் மற்றும் பெண்களின் முடியைத் திருத்தி, அழகுபடுத்தப் பயன்பட்டன. வெண்கல் உலோகத்தால் தயாரிக்கப்பட்ட இந்தக் கத்திரிக்கோல்களின் உற்பத்தி பெருகின. இப்படி 1948-இல் 'ஜே. விஸ் அண்டு சன்ஸ் வெளியிட்ட 'கத்திரிக்கோலின் கதை' என்ற புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.
மேலும் அதே புத்தகத்தில் சர்ப்ளின்டர்ஸ் பீட்ரி' என்பவர் குறுக்கும் நெடுக்குமான பிளேடு போன்ற கத்திரிக்கோலை முறைப்படுத்தி கி.பி. முதல் நூற்றாண்டுக்குப் பெருமை சேர்த்தார். 5- ஆம் நூற்றாண்டில், முடி திருத்துபவர்களும், தையல் கலைஞர்களும் தங்கள் தொழிலுக்கு ஏற்ற கத்திரிக்கோல்களை பிரதானமாகப் பயன்படுத்தியதாக ஸ்பெயின் நாட்டின் பத்திரிகையாளர் இசிடோர் என்பவர் குறிப்பு கொடுத்துள்ளார் என எழுதப்பட்டுள்ளது. இப்படி கத்திரிக்கோல் பற்றி. வரலாற்று நூல்கள் ஒவ்வொன்றின் மூலமும் பல தகவல்களை நாம் அறிந்து கொள்ள முடியும்.
ஆனால் இன்றைக்கும் நாம் கத்திரிப்பதற்காகப் பயன்படுத்தும் சாதாரண கத்திரிக்கோல்களை முதலில் கண்டுபிடித்து 1893-இல் உரிமம் பதிவு செய்தது. அமெரிக்காவின் வாஷிங்டன் நகரைச் சேர்ந்த லூசி ஆஸ்டின் என்பவர்தான்.
சேஃப்டி பின் (Safety Pin)
இன்று நாம் பயன்படுத்தும் சேஃப்டி பின்னை உருவாக்கியவர் வால்ட்டர் ஹண்ட்டு என்பவர். 1849-ஆம் ஆண்டு எதிர்பாராத விதமாக இவர் சேஃப்டி பின்னை உருவாக்கினார். இன்று உலகில் சேஃப்டி பின் பயன்படுத்தப்படாத நகரமே இல்லை. ஒருவரிடம் கடனாகப் பெற்ற பணத்தை அன்று மீண்டும் கொடுக்க வேண்டும்; என்ன செய்யலாம் என்று வால்ட்டர் ஹண்ட்டு யோசனை செய்தார். அவர் அப்போது ஒரு பித்தளைக் கம்பியை எடுத்து வளையம் போல் வளைத்தார். வளைக்கப்பட்ட கம்பியின் ஒரு முனை கொக்கி போலும், இன்னொரு முனை கூராகவும் இருந்தன. கூராக இருந்த முனையை கொக்கி வளையத்தின் மேல் வைத்து சேர்த்தார்.
இவ்வாறு சேஃப்டி பின் உருவாயிற்று. ‘வால்டர் ஹண்ட்டு’ தாம் அமைத்த சேஃப்டி பின்னின் உரிமையை ஒரு நிறுவனத்திற்குக் கொடுத்து பணத்தைப் பெற்றுக்கொண்டார். இவ்வாறு பணமும் புகழும் அவரை வந்தடைந்தன.