ஹேர்-டை செய்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை:
நம் முன்னோர் காலத்தில் குறிப்பிட்ட வயதுக்கு பிறகு தான் பெண்களுக்கு முடி நரைக்க ஆரம்பிக்கும். ஆனால் தற்போது நிலைமை அப்படி அல்ல. இள வயதிலேயே பல பெண்களுக்கு நரை விழுந்து விடுகிறது. இதற்கு தற்போதுள்ள சூழ்நிலை, மனநெருக்கடி, தண்ணீர் பற்றாக்குறை, கண்ட கண்ட ஷாம்புகளின் உபயோகம் என பல காரணங்கள் உள்ளன.
ஆதலால் இளம் வயதிலேயே டை அடித்துக் கொள்வது என்பது தற்போது சர்வ சாதாரணமான விஷயமாகி விட்டது. டை செய்யும் பெண்கள் ஒரு விஷயத்தை மனதில் அழுத்தமாகப் பதிய வைத்துக் கொள்ள வேண்டும். அதாவது எல்லா விதமான டைகளும் நச்சுத் தன்மை வாய்ந்த ரசாயனப் பொருள்களினால் தயாராகின்றன.
அதனால் எக்காரணத்தைக் கொண்டும் வெறுங்கையால் "டை" யைத் தொடக்கூடாது. டையைப் பயன்படுத்தும் போது கிளவுஸ் அணிந்து கொள்வது நல்லது. சிறுவர்கள் கைக்கு எட்டும் தூரத்தில் டையை வைக்கக் கூடாது. டையில் இருக்கும் ரசாயனப் பொருள்களும் உலோகப் பாத்திரமும் பொருத்தமில்லாதவையாகும். எனவே டையை உலோகப் பாத்திரங்களில் எடுக்காமல் பிளாஸ்டிக் கிண்ணங்களில் எடுப்பதே சிறந்தது.
பொதுவாக அதிகமாக கறுப்பு டைகளே உண்டு. இப்போது பிரவுண் கலர் டையும் நிறைய விற்பனை ஆகின்றன. சிலவகை பவுடர் டையை சுடுநீரிலும் இன்னும் சிலவகை டைகளை குளிர்ந்த நீரிலும் கரைக்க வேண்டும். எந்த நீரில் கரைக்க வேண்டும் என்பது அந்த டையின் சுவரிலே குறிப்பிடப்பட்டிருக்கும்.
டை செய்து கொள்வதால் மறுபடி முளைக்கும் முடி கறுப்பாக வளரும் என நினைப்பது தவறு. டை என்பது வெளியே தெரியும் முடிப்பகுதியை மட்டும் தான் கறுப்பாக்கும். ஆனால் முளைக்கும் மயிர்க்கால்கள் நரையாகவே தான் இருக்கும். எனவே வெளிப்புற அழகுக்காக மட்டும் டை செய்து கொள்ளலாம்.
டை செய்யும் முறை:
முதலில் தலைமுடியை சுத்தமாக கழுவ வேண்டும். ஷாம்பு போட்டு தலையைக் கழுவினால் முடியிலிருக்கும் அழுக்கும் எண்ணெய்ப் பிசுபிசுப்பும் போய் விடும். முடி நன்கு காய்ந்த பின்பு சீப்பு மற்றும் பிரஷ்ஷைப் பயன் படுத்தி "டை" செய்ய வேண்டும்.
டை செய்த பின்பு குறைந்தது இருபது நிமிடம் தலையைக் காய விட வேண்டும். தலை வேகமாகக் காய வேண்டும் என்பதற்காக தலையில் ஹீட்டர் போட்டு விடக் கூடாது. மின் விசிறிக் காற்றின் மூலம் காய விடுங்கள். அதன் பின்பு கண்டிஷனர் ஷாம்பு மூலம் முடியைக் கழுவ வேண்டும். கழுவும் போது டையின் பிசிறுகள் போய் விடும். ஷாம்புக்கு பதிலாக சோப்பு சேர்த்து உபயோகித்து தலையைக் கழுவக் கூடாது.
டை செய்து விட்டு நீண்ட நேரம் தலையைக் கழுவாமல் இருந்தால், டையில் உள்ள ரசாயனப் பொருள்கள் உடலினுள் இறங்கி விடும். டை செய்து 2, 3 நாள்கள் ஆகி விட்டால் வழக்கம் போல் எண்ணெய் தேய்த்துக் குளிக்கலாம். தலையில் எண்ணெய் தடவினால் தலையில் இருக்கும் டை இன்னும் கொஞ்சம் பளிச்சென்று கறுப்புடன் காட்சியளிக்கும்.
கண் புருவம் நரைத்திருக்கிறதே அதற்கும் கொஞ்சம் டை செய்து கொள்வோம் என்று ஆசைப்பட்டு விடாதீர்கள். புருவத்தை டை செய்தால் டையில் இருக்கும் நச்சுத்தன்மை கண்ணுக்குள் சென்று விடும். இது கண்களுக்குக் கெடுதியை உருவாக்கி விடும். புருவத்தைக் கறுப்பாக்க "ஐ ப்ரோ பென்சில் மட்டும் பயன் படுத்தினால் போதும்.
டையை உபயோகிக்கும் முன் செய்ய வேண்டியவை:
டை செய்பவர்கள் தங்களுக்கு அந்த டை அலர்ஜியை ஏற்படுத்துமா? இல்லையா? என்பதை முதலில் பரிசோதனை செய்வது அவசியம். டையின் அலர்ஜி தன்மை அறிய டாக்டர்களிடம் பரிசோதித்து, ஆலோசனை செய்து உபயோகப் படுத்தலாம். (அ) நீங்களாகவே அலர்ஜி சோதனை நடத்தி விடலாம். அது எவ்வாறு செய்ய வேண்டும் என்பது கீழேக் கொடுக்கப் பட்டுள்ளது.
டையில் சில துளிகள் எடுத்து டெவலப்பருடன் சேர்த்துக் கலக்குங்கள். டை செய்ய நினைப்பவரின் காது ஓரத்தில் ஏதாவது ஒரு சிறு பகுதி முடியை மட்டும் நன்றாகக் கழுவிக் காய விடுங்கள். பின்பு அந்த இடத்தில் மட்டும் டை செய்து காய விடுங்கள். டை செய்த 48 மணி நேரம் கழித்து டை செய்த இடத்தை மட்டும் சோப்பும் தண்ணீரும் கலந்து கழுவுங்கள்.
நீங்கள் பரிசோதித்த இடத்திலோ அதன் சுற்றுப்புறப் பகுதியிலோ சொறியோ, வீக்கமோ, எரிச்சலோ ஏற்பட வில்லை என்றால், நீங்கள் தைரியமாக முழு அளவில் டை செய்து கொள்ளலாம். உங்களுக்கு அலர்ஜியே வராது. ஒவ்வொரு முறை டை செய்யும் போதும் இப்படி பரிசோதனை செய்து பார்ப்பது சிறந்தது.