பொன்னால், பெண்ணுக்கு ஏற்படும் அழகு பற்றிய பொதுவான குறிப்புகள்:
பொன் (தங்க) நகைகளை விரும்பாத பெண்களே இல்லை எனலாம். சிறு பெண் முதல் 80 வயது கிழவி வரை அனைத்து பெண்களும் பொன் நகை அணியவே ஆசைப் படுவதுண்டு. அந்த அளவுக்கு, பெண்களுக்கு பொன்னின் மீது மோகம் உள்ளது. ஆபரணங்களால் பெண்களின் அழகு மெருகேற்றப்படுகிறது. மதிப்பும் உயர்வடைகிறது. இதில் முக்கிய விஷயம் என்னவென்றால் அவரவருக்கு பொருத்தமான நகைகளையே தேர்ந்தெடுத்து அணிய வேண்டும். இல்லையெனில் இருக்கின்ற அழக்குக்கும் குறைவு ஏற்பட்டு விடும்.
காதணிகளை தேர்ந்தெடுப்பது பற்றிய சில குறிப்புகள்:
முக வசீகரத்தைக் கூட்டுவதில் கம்மல்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதனால் முகத்திற்கு அழகு தரும் கம்மல்களையே தேர்ந்தெடுத்து வாங்க வேண்டும். பண வசதி அதிகம் இருக்கிறது என்பதற்காக பெரிய சைஸ் கம்மல்களை வாங்கி அணியக் கூடாது. அப்படி அணிந்தால் முக அழகு பாதிக்கப் படுவதோடு மட்டுமன்றி காதுகளின் துளைகள் பெரிதாகி, காதுகள் இழுக்கப்படும் நிலையும் ஏற்படும்.
ஆதலால் நம் காதுகளுக்கும் முகத்திற்கும் பொருத்தமான, பாதிப்பில்லாத கம்மல்களை தேர்ந்தெடுப்பது அவசியம். சிறு வயதில் பொட்டுக்கம்மல் என்பது பொருத்தமாக இருக்கிறது. ஓரளவு வளர்ந்து விட்ட நிலையில் வளையங்களை விரும்புகிறார்கள். திருமணப் பருவத்தில் கம்மல்களை நேசிக்கிறார்கள்.
தற்போது பெண்களை கவரும் பல வகை டிசைன்- களில் நாளுக்கு நாள் புதுப் புது வகையான காதணிகள் தயாரிக்கப் படுகின்றன. தங்கக் காதணிகள் மட்டுமே அழகு தரும் என்று அர்த்தமில்லை.
வெள்ளி, இதர உலோகங்கள், பிளாஸ்டிக், தேங்காய் ஓடு போன்றவற் றாலும் காதணிகள் தயாரிக்கப் படுகின்றன. இவ்வகை காதணிகள் டீன்-ஏஜ் பெண்களால் பெருமளவு விரும்பி வாங்கப் படுகின்றன.
கழுத்தில் அணியும் ஆபரங்களில் கூட சில பாரம்பரியங்கள் உண்டு. ஒவ்வொரு மதத்தினரும், இனத்தினரும் தங்களுக்கென்று தனித்தனியாக பலவகை தினுசுகளில் மரபு வழியாக ஆபரணங்களை அணிந்து வருகின்றனர். ஆனால் எல்லா மதங்களுக்கும், இனங்- களுக்கும் பொதுவாக இருப்பவை மோதிரங்கள்.
மோதிரங்களை தேர்ந்தெடுப்பது பற்றிய சில குறிப்புகள்:
பெண்கள் விரும்பி அணியும் மோதிரங்களை, பொதுவாக மூன்று வகையாகப் பிரிக்கலாம். அவை: இனிஷியல், சிக்நட், எம்ப்ளம் ரிங். இனிஷியல் மோதிரங்களில் எழுத்துக்கள் வடிவில் கற்கள் பதிக்கப்படும். சிக்நட் மோதிரங்களில் ரத்னக் கற்கள் பதிக்கப் படுவதில்லை. இதன் மேல் பகுதியில் எழுத்துக்கள் சேர்ந்த ஒரு முத்திரை காணப்படும்.
எம்ப்ளம் ரிங் வகை மோதிரங்கள் தனி வகையைச் சேர்ந்தவை. பழைய காலத்தில் கிரேக்கர்களும், ரோமானியர்களும் அணிந்திருக்கும் மோதிரங்களைப் பார்த்து அவர்களின் பதவி என்ன? என்பதைக் கண்டு அறிந்து விட முடியும். முற்காலத்தில் பதவிகளின் அடிப்படையில் அணியப்பட்ட மோதிரங்கள் தற்காலத்தில் அன்பின் அடையாளமாக அணியப் படுகின்றன.
பெண்களில் பெரும்பாலானோர் கற்கள் பதித்த மோதிரத்தையே விரும்பி அணிகிறார்கள். இருந்தாலும் திருமண நிச்சயதார்த்த மோதிரங்களுக்கென்று தனி மவுசு உண்டு. கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக நிச்சயதார்த்த மோதிர மரபு நீடித்து வருகிறது.
பெண்களை கவரும் அளவுக்கு தற்போது ஏராள- மான மாடல்களில் மோதிரங்கள் தயாரிக்கப்படுகின்றன. பெண்களின் உடல்வாகுக்கும், நிறத்துக்கும் தகுந்த படி மோதிரங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதிக வேலைப்பாடு நிறைந்த மோதிரங்களை வாங்குவதை விட கெட்டியான மோதிரங்களை வாங்கி அணிவதே சிறந்தது.
வளையல்களை தேர்ந்தெடுப்பது பற்றிய சில குறிப்புகள்:
பெண்கள் அணியும் ஆபரணங்களிலேயே அதிகளவு மாற்றங்களையும், மாடல்களையும் கொண்டிருப்பது தங்க வளையல்கள். பெண்களின் வளையோசைக்கு இருக்கும மதிப்பால், வளையல்களின் மவுசும் உயர்ந்து விட்டது. பெண்களில் பலர் தங்கள் கை அழகைப் பராமரிப்பது இல்லை. அதனால் கை நிறைய வளையல்களை அடுக்கிக் கொள்வதில் ஆர்வம் காட்டுகிறார்கள்.
ஆனால் அதிகமாக அணியப்படும் வளையல்கள் பெண்களுக்கு அழகைக் கொடுத்து விடுமா? என்றால், இல்லை என்று தான் சொல்ல வேண்டும். கரடு முரடாகத் தோன்றும் பெரிய வளையல்களே அழகையும் அலங்காரத்தையும் தரும். மீடியம் வகை வளையல்கள் அதிகம் அணிந்தாலும் பார்க்க அழகாகத் தான் இருக்கும். ஆனால் பெரிய அளவு வளையல்களில் ஒன்றிரண்டு அணிந்தாலே போதுமானது.
பொதுவாகவே வளையல்களை வாங்கி அணிந்து விட்டு, பின்பு அதனை விற்கும் போது அதிக நஷ்டம் ஏற்படாது. தங்கத்தின் மாற்றும் பெருமளவு குறையாது, மேலும் வளையல்களைப் பாதுகாப்பதும் எளிது; பராமரிப்பதும் எளிது.
பெண்கள் தங்கள் அழகுக்காக தங்க வளையல்களை மட்டும் தான் அணிய வேண்டும் என்பதில்லை. பிளாஸ்டிக், உலோகம், தேங்காய் ஓரு கண்ணாடி மற்றும் முலாம் பூசிய வளையல்கள் உள்பட ஏராளமான வகைகளைக் குறைந்த விலைக்கு ஏராள- மாக வாங்கி விட முடியும்.
நெக்லஸ் தேர்ந்தெடுப்பது பற்றிய சில குறிப்புகள்:
பொதுவாக அனேகமான பெண்கள் கல் வைத்த நெக்லஸ்களையே அணிய ஆசைப்படுகிறார்கள். மற்ற ஆபரணங்களை விட இது விலை சற்று அதிகமாகும். பொருத்தமான கற்களை நெக்லஸில் பதித்தால், பெண்ணின் அழகுக்கே அது மெருகேற்றும் என்பதில் சந்தேகம் வேண்டாம். அதிகமான அளவு பணத்தைக் கொடுத்து நெக்லஸ் வாங்க விரும்பும் பெண்கள், அதனைத் தேர்ந்தெடுக்கும் போது அதிக அவசரம் காட்ட வேண்டாம்.
நிதானமாகப் பார்த்து, கழுத்தில் அணிந்து பார்த்து வாங்குவதே நல்லது. பொதுவாக ஆபரணங்களை வாங்குவதில் காட்டும் ஆர்வத்தை விட அதைப் பராமரிப்பதில் தான் அதிக ஆர்வம் காட்ட வேண்டும். எல்லா நாள்களிலும் கல் வைத்த நெக்லஸ்களை அணியக் கூடாது.
நெக்லஸின் கற்களுக்குப் பொருத்தமான புடவையையும் உடுத்த வேண்டும். எப்பொழுதுமே பெண்கள் தேவைக்கு அதிகமான அளவு நகைகளை கழுத்தில் அணியக் கூடாது. நகைகள் ஒன்றோடு ஒன்று உராயும் போதும், கிறல் தோன்றும். இதனால் ஆபரணத்தின் பொலிவு குறையக்கூடும். எனவே இவ்வாறு நிகழாவண்ணம் ஆபரணங்களை அதன் மெருகு குறையாமல் பராமரிப்பது அவசியம்.
தங்க நகைகள் வாங்கும் போது பெண்கள் கவனிக்க வேண்டியவை:
நிறத்தையும், பளிச்சென்ற தன்மையையும் பார்த்து தங்க நகைகளை வாங்கக் கூடாது. ஏனெனில் பாலிஷ் மூலம் ஆபரணங்களுக்கு எந்த அளவுக்கு வேண்டுமானாலும் நிறம் கொடுக்கலாம். மஞ்சள் நிறம் அதிகமாக இருக்கும் என்று எண்ணி விடக் கூடாது.
வேலைப்பாடுகள் குறைந்த ஆபரணங்களை வாங்குவதே சிறந்தது. ஏனெனில் செய்கூலி குறைவு என்பதை விட விற்கும் போதும் அதிகக் கழிவு ஏற்படாது. கற்கள்,முத்துக்கள் பதித்த நகைகளை வாங்கும் போது, அதிக கவனம் காட்ட வேண்டும். சில கடைகளில் கற்களின் எடையையும் தங்கத்தின் எடை போல் பாவித்து விடுவார்கள். கற்களுக்கு தனி எடையும், தங்கத்திற்குத் தனி எடையும் - காட்ட வேண்டும்.
பழக்கம் உள்ள கடைகளிலே நகை வாங்குவது சிறந்தது. அதனால் ஏமாற்றம் தவிர்க்கப்படும். கூடவே பாதிப்புகள் ஏற்பட்டாலும் உடனடியாக பரிகாரம் காணவும் முடியும்.
ஆபரணங்களை பாதுகாப்பது பற்றிய குறிப்புகள்:
தங்க நகைகளைத் தனித்தனிப் பெட்டிகளில் பாதுகாப்பாக வைக்க வேண்டும். ஒன்றோடு ஒன்றாக பலவற்றைச் சேர்த்தால் நகைகளில் கிறல் ஏற்பட்டு விடும். இதனால் மாற்று குறைந்து கலரும் மங்கி விடும்.
ஆபரணத்தில் அதிகமாக அழுக்கு படிந்து விட்டால், சோப்பு கலவையில் போட்டு ஆபரணத்தைக் கொதிக்க வைத்து பின்பு டூத் பிரஷ் மூலம் தேய்த்துக் கழுவ வேண்டும்.
சோப்பு சேர்த்த இளம் சுடுநீரில் ஆபரணங்களை முக்கி அரை மணி நேரம் கழித்து தண்ணீரில் கழுவ வேண்டும். சிறதளவு பற்பசை அல்லது தரமான பல்பொடியில் சிறிதளவு எடுத்து பழைய பிரஷில் வைத்து ஆபரணங்களை சுத்தம் செய்யலாம்.
சோப்பு பொடியும், மஞ்சள் பொடியும் கலந்த நீரில் ஆபரணங்களைப் போட்டு, 5 நிமிடம் சூடாக்கி விட்டு, பின்பு கழுவினால் ஆபரணங்கள் பளிச்சென ஆகும். கல் பதித்த ஆபரணங்களை சுடு நீரில் போட்டு விடக் கூடாது. இவ்வாறு செய்வதால் கற்களுக்கு சேதம் ஏற்படும். மேலும் அதன் கவர்ச்சித் தன்மையும் நீங்கி விடும்.
பவளம், முத்து ஆபரணங்களின் மேல் ஒருவகை "கோட்டிங்" காணப்படும். சூடானால் அந்த 'கோட்டிங்' சிதைந்து விடும். காஸ்டிக் சோடா அல்லது உயர்ந்த வகை ஷாம்புவைப் பயன்படுத்தி கற்கள் பதித்த ஆபரணங்களைச் சுத்தப்படுத்தலாம்.
முத்து, வைடூரிய ஆபரணங்கள் மென்மையானவை. அதனால் கவனமாக சுத்தப்படுத்த வேண்டும். அவற்றை பிளாஸ்டிக் கவரில் வைக்கக் கூடாது. வெல்வெட் அல்லது துணியில் பொதிந்து வைக்க வேண்டும். வியர்வை, செண்ட் போன்றவை இந்த வகை ஆபரணங்களில் படுவது நல்லதில்லை. விசேஷ நிகழச்சிகளுக்கு மட்டுமே இந்த மாதிரியான ஆபரணங்களை அணிய வேண்டும்.
வைரம் பதித்த ஆபரணங்களை டூத் பேஸ்ட் மற்றும் மிருதுவான பிரஷ் பயன்படுத்தி சுத்தம் செய்ய வேண்டும். கல் பதித்த ஆபரணங்களை மிகக் கவனமாகப் பயன் படுத்த வேண்டும். கல் பதித்த ஆபரணங்களை அணியும் போது மெத்தைகளில் அல்லது மிருதுவான விரிப்புகளின் மீது இருந்து கொள்வது நல்லது. ஏனென்றால் அணியும் போது கை தவறிக் கீழே விழுந்தால் கற்கள் உடைந்து விடும்.
கம்மல், மூக்குத்திகளை குளியல் அறை, வாஷ் பேஸின் போன்றவற்றின் அருகில் நின்று கொண்டு அணிய வேண்டாம். கை தவறினால் அவை கழிவு ஓடையிலோ, தண்ணீரிலோ மூழ்கி விடும். கல் ஆபரணங்களை அது அதற்குரிய பெட்டிகளில் தனித் தனியாக அடுக்கி வைக்க வேண்டும்.
வெள்ளி ஆபரணங்களை பற்றிய குறிப்புகள்:
தங்க ஆபரணங்கள் அளவுக்கு இப்போது வெள்ளி ஆபரணங்களும் பெண்களால் விரும்பி அணியப் படுகின்றன. முன்பெல்லாம் அரைஞான், கொலுசு, மெட்டி, கால் தண்டை போன்றவற்றை வெள்ளியில் பெண்கள் வாங்கி உபயோகித்தார்கள். இப்போது காதணிகளும், கழுத்து நகைகளும் வெள்ளியில் விதவிதமாக விற்பனைக்கு வந்த வண்ணம் உள்ளன.
கொலுசுகள் கைத்தொழிலாகவும், மெஷின்கள் மூலமாகவும் தயாராகின்றன. இருந்தாலும் கையால் தயாரிக்கப்படுபவைக்கே பலம் அதிகம். மெஷின் தயாரிப்பு மூலம் மும்பையிலிருந்து பெருமளவு கொலுசுகள் தமிழ் நாட்டுக்கு வருகின்றன. மெஷின் தயாரிப்புகளின் ஆயுள், கையால் தயாரிக்கப்படுவதை விடக் குறைவு.
பொதுவாக அதிக எடையுள்ள கொலுசுகளை வாங்கக் கூடாது. 100 கிராமுக்கு மேல் கொலுசின் எடை இருப்பது நல்லதன்று. கொலுசுகளைத் தேர்ந்தெடுக்கும் போது அதன் திருகாணி நன்றாகப் பொருந்தி இருக்கிறதா? என்பதை பார்த்து வாங்க வேண்டும்.
பெண்கள் கால் விரல்களில் அணிவதற்கு "மெட்டி" என்று பெயர். பல வகையான மெட்டிகள் உண்டு. விரல்- களுக்குப் பொருத்தமான சிறிய வகை மெட்டிகளே பெண்களின் கால் அழகுக்கு ஏற்றதாக இருக்கும்.
வெள்ளியில் முதல் தரம், இரண்டாம் தரம் என்று இரு பிரிவு இருக்கிறது. இந்தத் தரங்களின் வித்தியாசத்தை பொது மக்களால் உணர முடியாது. ஆனால் பழக்கமுள்ள கடைகளில் முதல் தர வெள்ளியைக் கேட்டு வாங்கலாம்.
நல்ல வெள்ளி அதிக காலம் பிரகாசமாக இருக்கும். பழைய வெள்ளியை சில கடைகளில் வாங்கி அத்துடன் புதிய வெள்ளியையும் சேர்த்து உருக்கிக் கலப்பார்கள். இதுவே இரண்டாம் தர வெள்ளியாகும்.
சில பெண்களுக்கு வெள்ளி ஆபரணம் அணிந்தால் விரைவில் கறுத்து விடும். அவர்களது உடலில் இருக்கும் உஷ்ண நிலையால் தான் வெள்ளி விரைவில் கறுக்கிறது. வெள்ளியைச் சூடாக்கினால் கறுப்பு நிறம் மாறி விடும்.