அர்த்த சிரசாசனம் (Artha Sirsasana)
அர்த்த என்றால் பாதி சிரசு என்றால் தலை. இந்நிலை பாதி தலை கீழாக நிற்பது ஆகும்.
அர்த்த சிரசாசனம் செய்யும் முறை :
விரிப்பை நான்காக மடித்து தரையில் வைக்கவும். வஜ்ராசனம் நிலையில் முட்டி போட்டு இருக்கவும். முழங்கையை தரையில் ஊன்றவும். இரண்டு முழங்கைக்கும் இடையில் உள்ள இடைவெளி இரண்டு தோளுக்கும் உள்ள இடைவெளியை விட சற்று அதிகமாக இருக்க வேண்டும்.
இரண்டு கை விரல்களையும் இணைத்துக் கொள்ள வேண்டும். அப்போது இரண்டு உள்ளங்கைக்கும் இடைவெளி. இருக்கும். இப்போது தலையை இடைவெளி இருக்கிற இடத்தில் ஊன்றவும். தலை நேராக விரிப்பில் அழுத்தும்.
இப்போது மெல்ல முட்டியை உயர்த்தி கால்விரல்களை தலையை நோக்கி கொண்டு வரவும். உடலைமக்கோண வடிவில் வைத்திருக்கவும். தரையில் தலை. கால்விரல்,கைகள் மட்டும் பதிந்திருக்கும். கண்ணை மூடி உடலை தளர்வாக வைக்கவும். ஆசன நிலையில் இயல்பான சுவாசம் போதும்.
நேர அளவு :
ஒரு நிமிடம் அல்லது இரண்டு நிமிடங்கள் செய்யலாம். ஒரு முறைசெய்தால் போதுமானது.
பலன்கள் :
சிராசனத்தின் பாதி பலன்கள் இதன் மூலமும் கிடைக்கும்.
பயிற்சியாளர் கவனத்திற்கு :
ஆரம்ப நிலை பயிற்சியாளர்களும், வயதானவர்களும் சிரசானத்திற்குப் பதில் இதைப் பயிற்சி செய்யலாம். உடலின் 90 சதவீதம் எடை கைகளில் இருக்கும். 10 சதவீதம் எடை மட்டுமே தலையில் இருக்க வேண்டும்.
ஆசனம் முடிந்தவுடன் தலையை உடனடியாக உயர்த்தக் கூடாது. முப்பது வினாடிகள் கழித்து கண்களை மெல்ல திறந்து பின் நேராக உட்கார வேண்டும். கழுத்துப் பயிற்சி செய்து அதன் பிறகே எழுந்திருக்க வேண்டும்.