அர்த்த மத்ஸ்யேந்திர ஆசனம் (Ardha Matsyendrasana)
மத்ஸ்யேந்திர எனும் முனிவர் இப்பயிற்சியை தானே அமைத்து பயின்றதால் இந்த ஆசனத்திற்கு அர்த்த மத்ஸ்யேந்திர ஆசனம் என்று முனிவரின் பெயரால் வழங்கப் பெறுகிறது.
அர்த்த மத்ஸ்யேந்திர ஆசனம் செய்யும் முறை :
முதலில் விரிப்பின் மீது கால்களை நீட்டிய படி அமரவும். இடது கால் முட்டியை மடக்கி இடது குதிகால் வலது தொடையின் கீழ் வருமாறு வைக்க வேண்டும்.
வலது கால் முட்டியை மடக்கி அதன்பாதம் ஆசன வாய்க்கு அருகில் வருமாறு வைக்க வேண்டும். வலது தொடையினுடைய வெளிப்புறத்தில் இடது பாதத்தை இடுப்புக்கு வெகு அருகில் வைக்கவும்.
வலது கையை இடது முட்டி மேல் சுற்றி வைக்கவும். உடலின் பெரும்பகுதி இடதுபுறம் திரும்பும். வலது தோள் பட்டை இடது முட்டி மேல் அழுத்திக் கொண்டிருக்கும்.
இடது கணுக்காலை இடது கையால் பிடித்துக் கொண்டு முதுகெலும்பை மெல்ல இடதுபுறம் திருப்பவும். கழுத்தையும் இடதுபுறம் திருப்பவும். அப்போது முகவாய்க்கட்டை இடது தோளுக்கு நேராக இருக்கும். நெஞ்சை நேராக நிமிர்த்தி வைக்கவும்.
நேர அளவு :
சுமார் ஒரு நிமிட நேரம் அப்படியே இருக்கலாம். அச்சமயம் மூச்சை நன்றாக இழுத்து விட வேண்டும்.
பலன்கள் :
இந்த பயிற்சியின் போது முதுகெலும்பு நன்கு முறுக்கப்படுவதால் தண்டுவடமும் நரம்புகளும் புத்துணர்ச்சிப் பெறுகின்றன. முதுகுத் தசைகள், விலாத் தசைகள் முறுக்கப்பட்டு மண்ணீரல், கல்லீரல் நன்கு செயல்பட வைக்கிறது.
பயிற்சியாளர் கவனத்திற்கு :
இந்த பயிற்சியை மேற்கொள்ளும் போது எக்காரணத்தைக் கொண்டும் முதுகைப் பின்புறமாக வளைக்கக்கூடாது. இரத்த அழுத்தநோய் உள்ளவர்கள் இந்தப் பயிற்சியை கண்டிப்பாக மேற் கொள்ளக்கூடாது. சிலருக்கு தொடை பெருத்திருக்கும் சிலருக்கு முழங்காலை குறிப்பிட்ட அளவுக்கு மேல் மடிக்க முடியாது.
அவர்கள் இந்த ஆசனம் செய்ய முடியாது என்று எண்ணி பயிற்சியை மேற்கொண்டால் சில வாரப் பயிற்சிக்குப்பின் எளிதாகச் செய்ய இயலும் ஒரே நாளில் அதிக எண்ணிக்கையில் இப்பயிற்சியை மேற்கொள்ளாமல் குறிப்பிட்ட அளவு செய்து வந்தால் நல்ல பலனை கொடுக்கும்.