மச்சாசனம் (Matsyasana or Fish pose)
மச்சாசனம் என்பது மீன் உருவமன்று, செயல் வடிவில் மீன் போன்றதாகும். தண்ணீரில் உள்ள மீன்கள் நம் உடலிலுள்ள சிரங்கு போன்ற புண்களை கொத்தித் தின்னும். அதனால் புண்ணிலுள்ள கிருமிகள் ஒழிந்து விடுகிறது.
அது போன்று இந்த ஆசனத்தின் மூலம் நுரையீரலிலுள்ள விஷக்கிருமிகள் அழிக்கப்பட்டு நமக்கு ஆரோக்கியத்தை அளிப்பதால் இதற்கு மச்சாசனம் என்று கூறப்படுகிறது.
மச்சாசனம் பயிற்சி செய்யும் முறை :
யோகாசனப் பயிற்சிக்காகப் போடப்பட்ட விரிப்பின் மீது அமர்ந்து பத்மாசனம் போட்டுக் கொள்ள வேண்டும். முதலில் நிமிர்ந்து உட்கார்ந்து வலது காலை மடித்து இடது தொடையின் மீதும், இடது காலை மடித்து வலது தொடையின் மீதும் போட்டு கொண்டு கால்களைப் பிரிக்காமல் பின்பக்கமாகச் சாய்ந்து இரு கைகளையும் பின்பக்கமாக உயர்த்தியபடி வளைத்து தரையில் ஊன்றும்படி செய்ய வேண்டும்.
பிறகு மெதுவாக கழுத்தைப் பின்பக்கமாக வளைத்து தலையை தரையில் படும்படி வைத்து இடுப்பையும் மார்பையும் மேல் நோக்கி வில்லைப் போன்று வளைக்க வேண்டும்.
இப்போது பத்மாசனம் போட்டபடி இருந்த கால் தொடைகள் இரண்டும் தரையில் படும்படி இருக்க வேண்டும். அப்போது கைகளை முன்னால் கொண்டு வந்து இரு கை விரல்களால் இரு கால் பெருவிரல்களை கெட்டியாகப் பிடித்துக் கொள்ள வேண்டும்.
இச்சமயத்தில் மூச்சை நன்றாக உள்ளுக்கு இழுத்துக் கொண்டு மெதுவாக் வெளியே விட வேண்டும். இப்படி சுமார் ஒரு நிமிடம் வரை மூச்சை இழுத்தும் விட்டும் மச்சாசனம் பயில வேண்டும்.
மச்சாசனம் பயிற்சியின் பலன்கள் :
இப்பயிற்சியில் நரம்புகள் செயல்பாடும் தைராய்டு சுரப்பி நன்கு வேலை செய்கிறது. நுரையீரல் விரிவடைந்து தாராளமாக மூச்சை உள்ளுக்க இழுக்கப்படுகிறது. காசநோய், காசம், இருமல் போன்ற தொந்தரவுகளும் வராது.
முதுகெலும்பும், இடுப்பும் வளைக்கப்படுவதால் நரம்பு மண்டலம் வலிமை பெற்று உடல் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும். முக்கியமாக நுரையீரல் அதிக அளவில் காற்றை உள்ளுக்கு இழுப்பதால் பிராண வாயுவை எடுத்துக் கொண்டு இரத்தம் தூய்மை அடைகிறது.
மச்சாசனம் செய்யும் பயிற்சியாளர் கவனத்திற்கு :
மச்சாசனம் செய்பவர்கள் இடை இடையே விட்டுவிட்டு செய்யக் கூடாது. தினசரி செய்து வந்தால்தான் இதன் பலனை உணர முடியும்.
மச்சாசனப் பயிற்சியை அதிக நேரம் செய்யக் கூடாது. இரண்டு நிமிடங்கள் அல்லது ஜந்து நிமிடங்கள் செய்யலாம், இப்பயிற்சியின் போது கால்கள் தரையில் படும்படியாகப் பார்த்துக் கொள்ளுதல் வேண்டும், வெறும் வயிற்றோடுதான் இப்பயிற்சியை செய்ய வேண்டும்.