விபரீதகரணி ஆசனம் (Viparita Karani or legs up the wall pose)
விபரீதகரணி ஆசனத்தில் கால் மட்டும் செங்கத்தாகவும் உடல் பகுதி சாய்வாகவும் வைத்து பயிற்சியை மேற் கொள்கிறோம். சர்வாங்க ஆசனத்தில் உடல் முழுவதும் தலைகீழ் நிலையில் நிறுத்தப்பட்டு பயிற்சியை மேற் கொள்கிறோம்.
விபரீதகரணி ஆசனம் பயிற்சி செய்யும் முறை :
முதலில் விரிப்பின் மீது சர்வாங்காசனப் பயிற்சியைப் போன்று மல்லாந்து படுத்துக் கொண்டு, மூச்சை உள்ளுக்கு இழுத்து அடக்கியபடி நீட்டிய கால்களை ஒன்றாகச் சேர்த்து மேலே தூக்க வேண்டும்.
கால்களை மேலே தூக்கும்போது அச்சமயம் இரண்டு கைகளாலும் இடுப்புக்கு முட்டுக்கொடுத்துக் கொண்டு தாங்கிக் கொண்டு மேலே கால்களை செங்கத்தாக நிறுத்த வேண்டும்.
அப்போது உடலின் பாரம் முழுவதும் பின் கழுத்து. நெஞ்சின் மேல் பின்புறப் பகுதி ஆகியவற்றில் மட்டும் தாங்கியிருக்க வேண்டும்.
பின்பு தோள். வயிறு, நெஞ்சு ஆகியப் பகுதிகளை ஒரே நேர்கோட்டில் அதாவது இடுப்பிலிருந்து சுமார் 45 அளவு படத்திலுள்ளது போன்று சாய்ந்த நிலையில் இருக்க வேண்டும்.
அப்போது நன்கு மூச்சை வெளியே விட்டும் உள்ளுக்குள் இழுத்தும் விட்டு விட்டு இப்பயிற்சியை மேற் கொள்ள வேண்டும்.
விபரீதகரணி ஆசனம் பயிற்சி செய்யும் நேர அளவு :
இரண்டு நிமிடங்கள் செய்ய வேண்டும். இதே மாதிரி இரண்டு மூன்று முறைசெய்யவும்.
விபரீதகரணி ஆசனம் பயிற்சியின் பலன்கள் :
மார்பில் எந்தவித நோய்களும் ஏற்படாது. சளி, இருமல், காச நோய், ஆஸ்துமா, ஆகிய நோய்கள் தலை காட்டாது. அத்துடன் நரம்பு தளர்ச்சி, இரத்த அழுத்தம், சிறுநீரகக் கோளாறுகள் வராது.
கழுத்துப் பகுதியில் நல்ல இரத்தம் ஒட்டம் ஏற்படுவதால் தைராய்டு சுரப்பி நன்கு வேலை செய்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் கை கால்களுக்கு நன்கு இரத்த ஒட்டம் ஏற்பட்டு சுறுசுறுப்புடன் இயங்கும்.
விபரீதகரணி ஆசனம் செய்யும் பயிற்சியாளர் கவனத்திற்கு :
ஆண் பெண் சிறுவர் எல்லோருமே இந்தப் பயிற்சியை மேற் கொள்ளலாம். ஆனால் கருவுற்ற பெண்கள் இந்தப் பயிற்சியை மேற் கொள்ளக் கூடாது. ஆசனம் பயிலும் போது ஆரம்பத்தில் இருமல் சளி போன்ற தொந்தரவுகள் ஏற்படலாம். தொடர்ந்து இப்பயிற்சியை மேற்கொண்டால் தாமாகவே இந்தத் தொல்லைகள் அகன்று விடும்.
இருமல் அதிகமாக ஏற்பட்டால் சிறிது பசும்பாலை அருந்தி விட்டு இப்பயிற்சியை மேற் கொள்ளலாம், ஆரம்பத்தில் இடுப்பைத் தாங்கி பிடிக்க முடியாமல் போனால் இடுப்புப் பகுதிக்கு ஒரிரு தலையணையைக் கொடுத்து தாங்கிக் கொள்ளலாம்.
அப்போது கைகள் குப்புறகவிழ்ந்து கிடக்கும்படி விட வேண்டும். இது போன்று மேற்கொண்டு பின்பு தலையணையை எடுத்து விட்டு முறையோடு விபரீதகரணி ஆசனத்தைப் பழக வேண்டும்.