யோகமுத்ரா (yoga mutra)
இம்மாதிரி முத்திரைகள் ஆசனப் பயிற்சி, மூச்சுப்பயிற்சி, தசைப் பயிற்சி மற்றும் புலன்களைக் கட்டுப்படுத்துகிற பயிற்சிகளைக் கொண்டுள்ளன.
யோகமுத்ரா பயிற்சி செய்யும் முறை :
விரிப்பில் அமர்ந்து முதலில் பத்மாசனத்தைப் போட்டுக் கொள்ள வேண்டும். இரண்டு கைகளையும் பின்பக்கமாகக் கொண்டு வந்து வலது மணிக்கட்டை இடது கையினால் லேசாகப் பிடித்துக் கொண்டு மெதுவாக முன்பக்கமாகக் குனிய வேண்டும்.
குனிந்து தரையை நெற்றி தொடும் அளவிற்கு இடுப்பை முன்நோக்கி வளைக்க வேண்டும். இப்படி குனியும்போது மூச்சை வெளியே விடவேண்டும். நிமிரும்போது மூச்சை உள்ளுக்கு இழுக்க வேண்டும்.
இந்த ஆசனம் முடிந்தவுடன் நேராக நிமிர்ந்து உட்கார்ந்து மூன்று அல்லது நான்கு முறைஆழ்ந்த சுவாசம் செய்ய வேண்டும்.
யோகமுத்ரா பயிற்சி செய்யும் நேர அளவு :
பத்து முதல் இருபது வினாடிகள் செய்யவேண்டும், இரண்டு அல்லது மூன்று முறைசெய்யலாம்.
யோகமுத்ரா பயிற்சியின் பலன்கள் :
முதுகெலும்பு நேராகும், நுரையீரலிலுள்ள நோய்க் கிருமிகள் நாசமாகும். முக்கியமாக மலச்சிக்கல் நீங்கும். யோக முத்ராசனத்தைா மேற்கொள்ளும் போது வயிறு நன்கு மடிக்கப்பட்டு குடல்கள் நன்கு அழுத்தப்படுகிறது. இதனால் குடல் பகுதிகளுக்கு இரத்த ஒட்டம் அதிகரித்து குடல் பகுதிகள் நன்கு இயங்கப்படுகின்றது.
சிறுநீரகக் கோளாறுகள், கல்லீரல், பித்தப்பைக் கோளாறுகள் நீங்குகின்றது. இடுப்பு சிறுத்து வயிறு ஒடுங்கி அழகான வடிவமைப்பு பெறுகின்றது.
யோகமுத்ரா செய்யும் பயிற்சியாளர் கவனத்திற்கு :
இந்த ஆசனத்தைப் பயிலும் தொடக்க காலத்தில் தலையை தரையில் தொடும் அளவு முதுகை வளைக்க இயலாதவர்கள், தம்மால் எவ்வளவு தூரம் வளைக்க முடியுமோ அவ்வளவு தூரம வளைத்தால் போதுமானது. அதேபோன்று கைகளை எவ்வளவு உயரத்திற்கு சிரமம் இல்லாமல் உயர்த்த முடியுமோ அந்த அளவு உயர்த்தினால் போதுமானது.