வாகன காப்பீடு சாலையில் இயக்கப்படும் அனைத்து வாகனங்களுக்கும் காப்பீடு அவசியமானது. புதிதாக, இருசக்கர வாகனங்கள் வாங்கும் போது, காப்பீடு தொகை செலுத்த வேண்டும். பொதுவாக, மோட்டார் வாகன இன்ஸ்யூரன்ஸ் பாலிசிகள் ஓர் ஆண்டு செல்லத்தக்க கால அளவை கொண்டிருக்கும்.
பின், ஆண்டுதோறும், குறிப்பிட்ட தொகை செலுத்தி, காப்பீட்டை புதுப்பித்து கொள்ள வேண்டும். ஆனால், பெரும்பாலானோர், வாகனம் வாங்கும் போது, காப்பீட்டு தொகை கட்டுவதோடு சரி, ஆண்டுதோறும், புதுப்பிப்பதில்லை.
போக்குவரத்து துறை அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து போலீசார், சாலைகளில், வாகன தணிக்கை செய்யும் போது, வாகனத்திற்கு காப்பீடு செய்யாமல் இருந்தால், அபராதம் விதிக்கின்றனர்.
குறிப்பாக, மோட்டார் வாகன சட்டம் 196ன் படி, காப்பீட்டு தொகை செலுத்தாத வாகனங்களுக்கு, 500 ரூபாயும், மீண்டும் காப்பீடு செலுத்தாமல், வாகனத்தை இயக்குவது தெரியவரும் பட்சத்தில், 1,000 ரூபாயும் அபராதம் விதிக்கின்றனர்.
வாகனத்திற்கு உரிய ஆவணம் இல்லாத பட்சத்தில், அந்த வாகனத்தை பறிமுதல் செய்யும் அதிகாரமும் இருப்பதால், காப்பீடு செலுத்துவது அவசியமாகிறது.
காப்பீடு அவசியம் ஏன்?
விபத்து ஏற்படும் போது வாகன ஓட்டிக்கு படுகாயம் ஏற்பட்டாலோ அல்லது உயிரிழப்பு ஏற்பட்டாலோ காப்பீட்டுத் தொகை கிடைக்கும். போலீஸ் நடவடிக்கை குறைவதுடன், பாதிக்கப்பட்டவருக்கும் இழப்பீடு கிடைக்கும்.
விபத்தில் சிக்கி வாகனம் சேதமடைந்தால் பழுது பார்க்க, இழப்பீடு கிடைக்கும். வாகனம் தொலைந்து விட்டாலோ அல்லது தீ, வெள்ள சேதத்தால் பாதிக்கப்பட்டாலோ இழப்பீடு கிடைக்கும்.
நாம் வாங்கும் கார்கள், டிரக்குகள், இருசக்கர வாகனங்கள் மற்றும் பிற வர்த்தக வாகனங்களுக்கு, என அனைத்து வாகனத்திற்கு காப்பீடு செய்கிறோம். இதனால், நம்முடைய வாகனத்திற்கு முழு காப்புறுதி அளிக்கப்படுகிறது.
இதன் முதன்மை பயன்பாடு என்னவென்றால், வாகன விபத்தின் மூலம் ஏற்படும் சேதம், திருட்டுப் போகும் போது மற்றும் தீ பிடித்தல் வாயிலாக ஏற்படும் இழப்புகளுக்கு இந்த காப்பீட்டின் மூலம் நிதி மற்றும் சொத்து இழப்பீடு அளிக்கப்படுகிறது. பயணத்தின் போது எதிர்பாராமல் ஏற்படும் இடர்பாடுகளை எதிர்கொள்ள காப்பீட்டு திட்டங்கள் துணைபுரிகின்றன.
இதற்காக நிர்ணயிக்கப்பட்ட கால இடைவெளியில் குறிப்பிட்ட தொகையை வாடிக்கையாளர்களிடமிருந்து காப்பீட்டு நிறுவனங்கள் பெறுகின்றன. இதற்கு பிரீமியம் என்று பெயர். இடர்பாடு ஏற்படும்போது ஒப்புக்கொள்ளப்பட்ட தொகை வழங்கப்படுகிறது.
வாகன காப்பீட்டு திட்டத்தின் கால அளவு?
பொதுவாக, மோட்டார் வாகன இன்ஸ்யூரன்ஸ் பாலிசிகள் ஓர் ஆண்டு செல்லத்தக்க கால அளவை கொண்டிருக்கும். ஆண்டுதோறும் புதுப்பிக்க வேண்டியது அவசியம்.
வாகன காப்பீட்டு திட்டத்தின் வகைகள் என்ன?
இரண்டு வகையான வாகன காப்பீட்டு திட்டங்கள் நடைமுறையில் இருக்கின்றன. முதலாவது, மூன்றாம் நபர் காப்பீட்டு திட்டம், இரண்டாவது, ஒருங்கிணைந்த வாகன காப்பீட்டுத் திட்டம். இதில், மூன்றாம் நபர் காப்பீட்டு திட்டம் அவசியமானது.
ஒருங்கிணைந்த காப்பீட்டு திட்டத்தில் ஒட்டுமொத்த இழப்பீடுகளை பெற வழி வகை உள்ளதால் அவசர சமயங்களில் மிகுந்த உதவிகரமாக இருக்கும்.
மூன்றாம் நபர் காப்பீட்டு திட்டம் என்றால் என்ன?
வாகனங்களால் எதிரில் வருபவர்க்கும், பொருட்களுக்கும் இழப்பீடு கோரும் காப்பீட்டு திட்டத்துக்கு மூன்றாம் நபர் காப்பீடு எனப்படுகிறது. இந்த காப்பீட்டு திட்டத்தின் மூலம் பாலிசிதாரரால் மூன்றாம் நபருக்கு ஏற்படும் நிரந்தர ஊனம், இறப்பு மற்றும் பொருட்சேதங்களுக்கு இழப்பீடு வழங்க இயலும்.
உங்களது வாகனத்தால் எதிரில் வருபவர்களுக்கும், பொருட்களுக்கும் ஏற்படும் அனைத்து பாதிப்புகளுக்கும் இழப்பீடு கோர முடியும்.
ஆனால், பாலிசிதாரரின் வாகனத்திற்கும், அவருக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கும் இழப்பீடு கிடைக்காது. மூன்றாம் நபர் காப்பீட்டு திட்டத்தில் கார்களுக்கு அதிகபட்சமாக ரூ.7.5 லட்சம் வரையிலும், இருசக்கர வாகனங்களால் ஏற்படும் பாதிப்புகளுக்கு அதிகபட்சமாக ஒரு லட்சம் ரூபாய் வரையிலும் இழப்பீடு கோர முடியும்.
ஒருங்கிணைந்த வாகன காப்பீட்டு திட்டம் என்றால் என்ன?
மூன்றாம் நபர் காப்பீட்டு திட்டத்தைவிட கூடுதல் பயனளிக்கும் திட்டம் இது. மூன்றாம் நபர் காப்பீட்டு திட்டத்தில் கிடைக்கும் பணப் பாதுகாப்பையும் சேர்த்து உங்களது வாகனத்திற்கு விபத்து, தீ விபத்து, வெள்ளம், நில நடுக்கம், வன்முறை சம்பவங்கள் போன்றவற்றால் ஏற்படும் திடீர் பாதிப்புகளுக்கு இந்த ஒருங்கிணைந்த வாகன காப்பீட்டு திட்டத்தின் மூலம் பணப் பாதுகாப்பை பெற முடியும்.
இதுதவிர, காரின் மியூசிக் சிஸ்டம், ஏசி உள்ளிட்ட ஆக்சஸெரீஸ்களுக்கும் காப்பீடு செய்துகொள்ள முடியும். இதற்காக, கூடுதல் பிரீமியம் தொகையை செலுத்த வேண்டியிருக்கும்.
பிரீமியம் தொகையை நிர்ணயிக்கும் காரணிகள்?
எஞ்சினின் சிசி எனப்படும் கியூபிக் திறன் வாகனத்தின் வயது பகுதி வாகன மாடல் ஐடிவி எனப்படும் காப்புத் தொகை மதிப்பு.
நோ கிளெய்ம் போனஸின்(NCB) பயன்கள் என்ன?
பாலிசியின் ஓர் ஆண்டு காலத்தில் இழப்பீடு கோரவில்லையெனில், புதுப்பிக்கும்போது வழங்கப்படும் தள்ளுபடிதான் நோ கிளெய்ம் போனஸ் என்று கூறப்படுகிறது.
தொடர்ந்து பாலிசி புதுப்பித்துக் கொண்டே வரும்போது அதிகபட்சமாக 50 சதவீதம் வரை நோ கிளெய்ம் போனஸ் எனப்படும் தள்ளுபடியை ஒரு பாலிசியில் பெறலாம். அதன் விபரத்தை கீழே காணலாம்.
நோ கிளெய்ம் போனஸ் தள்ளுபடி விபரம்: முதல் ஆண்டு பாலிசியில் இழப்பீடு கோராதபட்சத்தில் புதுப்பிக்கும்போது 20 சதவீத தள்ளுபடியும், தொடர்ந்து இரண்டாண்டுகளுக்கு இழப்பீடு கோராதபட்சத்தில் 25 சதவீதம் தள்ளுபடியும், தொடர்ந்து மூன்றாண்டுகளுக்கு இழப்பீடு கோராதபட்சத்தில் 35 சதவீத தள்ளுபடியும், தொடர்ந்து நான்காண்டுகளுக்கு இழப்பீடு கோராதபட்சத்தில் 45 சதவீத தள்ளுபடியும், தொடர்ந்து ஐந்தாண்டுகளுக்கு இழப்பீடு கோராதபட்சத்தில் 50 சதவீத தள்ளுபடியும் கொடுக்கப்படுகிறது.
வாகன பழுது காப்பீட்டு திட்டம்: விபத்து, இயற்கை சீற்றங்களை தவிர்த்து வாகனங்களில் திடீரென ஏற்படும் பழுது மற்றும் தேய்மான பாகங்களை மாற்றித்தரும் வகையில் குறிப்பிட்ட காலத்திற்கு பணப்பாதுகாப்பு தரும் காப்பீட்டு திட்டம் இது. இதில், வாகனத்தில் ஏற்படும் திடீர் பழுது மற்றும் தேய்மான பாகங்களுக்கான காப்பீட்டு ஆகியவற்றை தனித்தனியாகவும் செய்து கொள்ளலாம். குறிப்பிட்ட காலத்தில் ஏற்படும் அனைத்து பழுது மற்றும் தேய்மான பாகங்களுக்கான இழப்பீட்டை இந்த திட்டங்கள் மூலம் பெறலாம்.
இழப்பீடு கோரும் முறைகள்: வாகன காப்பீட்டு திட்டத்தின் மூலம் இழப்பீடு கோரும்போது முறையான ஆவணங்களுடன் காப்பீட்டு நிறுவனத்திடம் விண்ணப்பிக்க வேண்டும். காப்பீட்டு ஆவணம், வாகனத்தின் பதிவு சான்று, விபத்தின்போது ஓட்டியவரின் ஓட்டுநர் உரிமம், பாதிப்புகளின் விபரம் குறித்து சர்வீஸ் மையத்திலிருந்து எவ்வளவு செலவாகும் என்று அளிக்கப்படும் ஆவணங்கள் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.
மதிப்பீட்டாளர் ஆய்வு: ஆவணங்கள் சமர்ப்பித்த பின்னர் காப்பீட்டு நிறுவனத்தின் மதிப்பீட்டாளர் ஒருவர் வாகனம் மற்றும் இதர பாதிப்புகள், சேதாரங்களை மதிப்பீடு செய்வார். சர்வீஸ் மையத்திலிருந்து கொடுக்கப்பட்டிருக்கும் இழப்பீடுக்கான தொகை சரியாக உள்ளதா என்பதையும் ஒப்பிட்டு பார்த்து காப்பீட்டு நிறுவனத்திற்கு தெரிவிப்பார்.
அதன்பிறகே, வாகனத்தை சரி செய்ய முடியும். வாகனத்தை சரிசெய்த பின்னர் சர்வீஸ் மையத்திலிருந்து வழங்கப்படும் ஒரிஜினல் ரசீதுகளை காப்பீட்டு நிறுவனத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். காரை டெலிவிரி எடுக்கும்போது மீண்டும் காப்பீட்டு நிறுவனத்தின் மதிப்பீட்டாளர் இழப்பீடு கோரிய பாகங்கள் மாற்றப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்வார்.
திருட்டு போனால் என்ன செய்ய வேண்டும்?
கார் திருட்டு போகும் பட்சத்தில், அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் அளிப்பதோடு, காப்பீட்டு நிறுவனத்திற்கும் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும், கார் திருட்டுபோகும் போது அதற்கான இழப்பீட்டை உடனடியாக பெற இயலாது.
காரை கண்டுபிடித்து தருவதற்கு காவல் நிலையத்தில் குறிப்பிட்ட கால அவகாசம் கேட்பார்கள். அந்த கால அளவை தாண்டிய பின்னரே காரை கண்டுபிடித்து தர முடியவில்லை என்று சான்று வழங்குவார்கள்.
அந்த சான்றையும், வட்டார போக்குவரத்து அலுவலகத்திலிருந்து ஒரு சான்றையும் பெற்று காப்பீட்டு நிறுவனத்திடம் இழப்பீட்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
திருட்டுக்கான காப்பீடு: உங்கள் வாகனம் திருட்டு போனால் உடனே காவல் துறைக்கும், காப்பீடு நிறுவனத்திற்கும் தெரிவிக்க வேண்டும். அத்துடன் போக்குவரத்து துறைக்கு தெரிவிப்பதும் அவசியம். காப்பீடு ஆவணத்தை பெற்ற உடனேயே இழப்பீடு பெறுவதற்கான முறைகளையும், ஆவணக்கோப்புகளையும் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
இழப்பீடு கோரும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணங்களையும் சேர்த்து, கையொப்பமிட்டு காப்பீடு நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.குறிப்பிட்ட சில வகையான இழப்பீடுகளுக்கு சில சிறப்பு ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டி இருக்கும்.
உதாரணத்திற்கு திருட்டு போனதற்கான இழப்பீடு கோருவதற்கு வாகனத்தின் மாற்று சாவிகளை காப்பீடு நிறுவனத்திற்கு அளிக்க வேண்டும்.
வாகன காப்பீடு செய்திருக்கும் நபர்கள் இழப்பீட்டை எப்போது பெறுவது, எப்படி பெறுவது ?
உங்கள் வாகனம் சம்பந்தப்பட்ட விபத்துகளில் மூன்றாம் தரப்புக்கான இழப்பீட்டை பெற விரும்பினால் உடனே காவல் துறைக்கும், காப்பீட்டு நிறுவனத்திற்கும் தெரியப்படுத்துதல் அவசியம்.
வேறு ஒருவரின் வாகனம் சம்பந்தப்பட்ட விபத்துகளில் பாதிக்கப்பட்டவர் நீங்களாக இருந்தால் காப்பீடு சம்பந்தப்பட்ட விவரங்களை வாகன உரிமையாளரிடம் இருந்து பெற்று காப்பீடு நிறுவனத்திடம் தெரிவிக்க வேண்டியது அவசியம்.
சுய சேதத்திற்கான இழப்பீடு வாகன விபத்து குறித்த இழப்பீடு கோரும் போது அது குறித்த விவரங்களை காவல் துறையிடமும், காப்பீட்டு நிறுவனத்தினிடமும் தெரிவித்தல் அவசியம்.
அவ்வாறு தெரிவித்தால் மட்டுமே விபத்து நடந்த இடத்திற்கு ஒரு சோதனையாளரை அனுப்பி சேதத்தின் அளவு குறித்து அவர்களால் ஆய்வு செய்ய முடியும்.
விபத்து நடந்த இடத்தில் இருந்து காவல் துறை மற்றும் காப்பீட்டு நிறுவனத்தின் அனுமதி இல்லாமல் வாகனத்தை நகற்ற முயற்சிக்கக் கூடாது.
வாகனத்தை எடுத்துச் செல்ல உத்தரவு கிடைத்த பின் அவ்வாறு செய்தல் நன்று. உங்கள் காப்பீடு பணமில்லா சேவை அளிப்பதாக இருந்தால் வாகனத்தை சரி செய்யும் பணிமனைக்கு காப்பீட்டு நிறுவனமே நேரடியாக சரி செய்ய ஆகும் கட்டணத்தை அளித்துவிடும்.
இந்த சேவை இருந்தாலும் இல்லாவிடினும் காப்பீடு நிறுவனத்திற்கு தகவல் தெரிவிப்பது அவசியம்.
தற்போதைய மூன்றாம் நபர் காப்பீட்டு பிரீமியம் அதிகரிப்பு ?
பணவீக்கம், காப்பீட்டாளருக்கு ஏற்படும் இழப்பு விகிதம் மற்றும் பிற காரணிகளை கருத்தில் கொண்டு, ஓவ்வொரு ஆண்டும், ஏப்ரல் மாதத்தில், காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையமான ஐ.ஆர்.டி.ஏ. (IRDAI), மூன்றாம் நபர் காப்பீட்டு பிரீமியம் விகிதத்தை மாற்றியமைக்கிறது.
சமீபத்தில், ஐ.ஆர்.டி.ஏ., மூன்றாம் நபர் வாகன விபத்து காப்பீட்டு பிரிவில் தனியார் கார்களுக்கான பிரீமிய கட்டணத்தை 25 முதல் 137 சதவீதம் வரையிலும், இரு சக்கர வாகனங்களுக்கான பிரீமிய கட்டணத்தை 1 முதல் 45 சதவீதமாக உயர்த்தியது.
சென்ற ஏப்ரல் மாதம், இக்காப்பீட்டிற்கான பிரீமியம் உயர்த்தப்பட்ட நிலையில், கடந்த மூன்று ஆண்டுகளில், இது மூன்றாவது முறையாகும். பொதுக்காப்பீட்டு நிறுவனங்கள், கடந்த ஆண்டு இதற்கான பிரீமியத்தை, 60% உயர்த்த கோரிக்கை விடுத்திருந்தன.
ஆனால், மோட்டார் வாகன உரிமையாளர்கள், இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, மூன்றாம் நபர் வாகன காப்பீட்டிற்கான பிரீமியத் தொகை, 20 சதவீதம் மட்டுமே உயர்த்தப்பட்டது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக, மூன்றாம் நபர் காப்பீட்டு பிரீமியம், 65 சதவீதம் உயர்த்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மூன்றாம் நபர் காப்பீட்டு பிரீமிய கட்டணம் ஏன் உயர்த்தப்படுகிறது?
ஐ.ஆர்.டி.ஏ. வின் கணக்கீட்டின் படி, 2009–10-ம் ஆண்டு முதல், இத்துறையில் இறப்பு விகிதம் தொடர்ந்து அதிகரித்து வந்தது.
இந்த துறையில் உயிர் சேதம் குறித்து நிதி கோரும், சராசரியான பாலிசி அளவு, 2011–12 ஆம் ஆண்டை காட்டிலும், 2012–13 ஆம் ஆண்டில் 27.2% அதிகரித்துள்ளது (மார்ச் 30, 2013-ம் தேதி வரை).
நவம்பரில், நிபுணர்கள் குழுவின் பரிந்துரையின் படி, நஷ்ட மதிப்பீடுகளின் அடிப்படையில், இழப்பீட்டிற்கு வழங்கும் தொகையை 145 சதவீத்திலிருந்து 210 சதவீதமாக ஐ.ஆர்.டி.ஏ உயர்த்தியது. இந்த உயர்வு, காப்பீடு வழங்குபவருக்கு மேலும் சுமையை ஏற்படுத்தியது.
ஏனென்றால், ஏற்கனேவே காப்பீடு வழங்குபவர்கள் அதிக இழப்பீட்டு கோரிக்கையை வழங்க வேண்டியிருந்தது. மேலும், இந்த சுமையும் சேர்ந்ததால், காப்பீட்டிற்கு உண்டான பிரீமிய தொகையை உயர்த்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.
சொந்த வாகன சேதத்திற்கு இழப்பீடு கோரும் காப்பீடு, இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு இலாபகரமாக இருக்கிறது, ஆனால், மூன்றாம் நபர் வாகன காப்பீட்டில், இழப்பீடு கோரும் விகிதம் 140 சதவீதத்திற்கு மேல் இருந்தால், காப்பீட்டு நிறுவனங்கள் நஷ்டத்தையே சந்திக்கின்றன.
மூன்றாம் நபர் வாகன காப்பீட்டில், வர்த்தக வாகனங்களிடமிருந்து அதிகளவில் இழப்பீடு வேண்டி விண்ணப்பங்கள் வருகின்றன. இதனால், IRIDA அமைப்பு பொதுக்காப்பீட்டு நிறுவனங்கள், இழப்பீட்டிற்காக, அதிகளவில் தொகையை ஒதுக்கும் வகையில் நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால், பொதுக் காப்பீட்டு நிறுவனங்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளன.
மூன்றாம் நபர் வாகன காப்பீட்டால், ஆண்டுக்கு, 8,00,010 ஆயிரம் கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படுவதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. இதனால், காப்பீட்டு நிறுவனங்களின் செயல்பாடுகளை மிகவும் பாதிப்புக்கு உள்ளாகிறது.
ஆகையால், இழப்பீட்டிற்காக அதிகளவில் தொகையை ஒதுக்க வேண்டியுள்ளது. இதன் காரணமாகவே, இத்துறை நிறுவனங்கள் மூன்றாம் நபர் காப்பீட்டிற்கான பிரீமியத் தொகையை உயர்த்தி வருகின்றன.
மொத்தத்தில், மூன்றாம் நபர் காப்பீட்டு திட்டம், வாகன ஓட்டிகளுக்கு அவசியமான ஒன்றாக இருக்கிறது. இதனால், ஒவ்வொரு ஆண்டும் வாகன காப்பீட்டு பிரீமியத்தை, பொது காப்பீட்டு நிறுவனங்கள் உயர்த்தும் போது, எந்தவித ஆட்சேபம் இன்றி பிரீமியத்தை செலுத்த வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுகிறார்கள்.
வரும் ஆண்டுகளில், பொது காப்பீட்டு நிறுவனங்கள், எந்த அளவிற்கு பிரீமியத்தை உயர்த்த போகின்றன என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.